திமுக மேலும் சில கட்சிகளுடன் கூட்டணி?- கருணாநிதி முடிவெடுப்பார்: மு.க.ஸ்டாலின்

திமுக மேலும் சில கட்சிகளுடன் கூட்டணி?- கருணாநிதி முடிவெடுப்பார்: மு.க.ஸ்டாலின்
Updated on
1 min read

மேலும் சில கட்சிகளுடன் கூட்டணி வைப்பது குறித்து கட்சியின் தலைவர் முடிவெடுப்பார் என்றார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

திருச்சியில் வருகிற 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள திமுகவின் 10-வது மாநில மாநாட்டு ஏற்பாடுகளைப் பார்வையிட 3-வது முறையாக அந்தக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திருச்சி வந்தார். மாநாட்டுப் பந்தலுக்குச் சென்ற அவர், மீண்டும் திங்கள்கிழமை காலையும் சென்று பார்வையிட்டார். அங்கு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

மாநாட்டு ஏற்பாடுகள் 95 சதவீதம் முடிந்து உள்ளன. எஞ்சிய பணிகள் ஓரிரு நாளில் நிறைவடைந்துவிடும். மக்களவைத் தேர்தல் வரவுள்ள சூழ்நிலையில் இந்த மாநாடு நடைபெறுவதால் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

பாஜகவுடன் கூட்டணி அமைக்க திமுக முயற்சிப்பதாக சில ஊடகங்கள் வேண்டுமென்றே செய்தி பரப்புகின்றன. அதில் சிறிதும் உண்மையில்லை. அதே வேளையில், செய்தியாளர்கள் விரும்பும் திருப்புமுனை இந்த மாநாட்டுக்குப் பிறகு ஏற்படும். தேமுதிகவுடன் கூட்டணி அமைப்ப தற்கான பேச்சுவார்த்தை பத்திரிகை யாளர்களுக்குத் தெரியாமல் நடக்காது.

மாநாட்டின் நிறைவு நாளன்று திமுக கூட்டணியில் தற்போது இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் மற்றும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தரும் இயக்கங்களின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுவர்.

தொகுதி உடன்பாடு குறித்து பேசுவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவினர் அளிக்கும் விவரங்களை ஆராய்ந்து கட்சித் தலைவர் முடிவு செய்வார். அதேபோல மேலும் சில கட்சிகளுடன் கூட்டணி வைப்பது குறித்தும் அவரே முடிவெடுப்பார். இந்த மாநாட்டைத் தடை செய்ய அரசு சார்பில் பல இடையூறுகள் வந்தாலும், அதையெல்லாம் முறியடித்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவோம்” என்றார் ஸ்டாலின்.

பேட்டியின்போது மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் கே.என். நேரு, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in