

சென்னை மற்றும் புறநகர் மின்சார ரயில் நிலையங்களில் போதிய அளவில் கழிப்பிட வசதியில்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னை மாநகரின் எல்லை விரிவடைந்துள்ள நிலையில், மின்சார ரயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து தினமும் 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னைக்கு ரயிலில் வந்து செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கு ஏற்ற வகையில் புறநகர் மின்சார ரயில் நிலையங்களில் வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.
சென்னையில் சென்ட்ரல் மற்றும் எழும்பூர் போன்ற ஒரு சில முக்கியமான ரயில் நிலையங்களில் மட்டுமே கழிப்பிட வசதிகள் உள் ளன. சைதாப்பேட்டை, கிண்டி, பல்லாவரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பெரும்பாலான ரயில் நிலையங்களில் கழிப்பிடங்கள் இருந்தும் அவை மூடிக்கிடக்கின்றன.
கடந்த 2006-ம் ஆண்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 74 புறநகர் ரயில் நிலையங்களில் கட்டண கழிப்பிடங்களை அமைத்து பராமரிக்கலாம் என்று மத்திய ரயில்வே துறை அறிவித்தது. மேலும் சென்ட்ரல், எழும்பூர் போன்ற பெரிய அளவிலான ரயில் நிலையங்களை அங்குள்ள சுகாதாரத்துறையே தூய்மைப்படுத்தி, கண்காணிக்கலாம் என்றும் மற்ற இடங்களில் உள்ள ரயில்நிலையங்களை தூய்மைப்படுத்தும் பொறுப்பை அந்தந்த ரயில் நிலையத்தின் வணிக மேலாளர்களிடம் ஒப்படைப்பது என்றும் அறிவுறுத்தப்பட்டன. அதில், தற்போது 44 ரயில் நிலையங்களில் மட்டுமே சுகாதாரப்பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இதிலும் கழிப்பிட வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. போராட்டம் நடத்துவோம் இது தொடர்பாக திருநின்றவூர் ரயில் பயணிகள் பொது நலச்சங்கத்தின் செயலாளர் எஸ்.முருகையன் கூறும்போது, “குடிநீர் வசதி, இருக்கை வசதி, கழிப்பிடம் அமைத்து கொடுத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டுமென ரயில்வே அமைச்சர்களிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இங்குள்ள ரயில்வே அதிகாரிகளும் எங்கள் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, நிறைவேற்றுவதில்லை. எனவே, தற்போதுள்ள 17 சங்கங்கள் சேர்ந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கி போராட்டங்களை நடத்தவுள்ளோம்’’ என்றார்.
இது தொடர்பாக டிஆர்இயு செயல் தலைவர் ஆர்.இளங்கோவனிடம் கேட்டபோது, ‘‘மின்சார ரயில் நிலையங்களில் போதிய தண்ணீர் வசதியை ஏற்படுத்தி, கழிப்பறைகள் அமைத்து நிரந்தர துப்புரவு பணியாளர்களை நியமித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நிரந்தரமாக குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி கிடைக்கும்’’என்றார்.