Published : 24 Mar 2015 03:16 PM
Last Updated : 24 Mar 2015 03:16 PM

அதிகாரி தற்கொலை வழக்கை திசை திருப்ப அவதூறு தகவல்களை பரப்புவதா?- ராமதாஸ்

வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி வழக்கை திசை திருப்ப அவரைப் பற்றி அவதூறு தகவல்களை ஊடகங்களுக்கு பரப்பிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண்துறை உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; இதற்குக் காரணமான முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியை கைது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், இந்த வழக்கை திசை திருப்பும் நோக்கத்துடன் முத்துக்குமாரசாமி பற்றி அவதூறான செய்திகளை தமிழக காவல்துறை பரப்பி வருகிறது. இது கண்டிக்கத்தக்கதாகும்.

வேளாண்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி நெல்லையில் அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவதற்காக தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றிடம் ரூ.13.50 லட்சம் முன்பணம் கொடுத்திருந்ததாகவும், அது குறித்த விசாரணைக்காக பிப்ரவரி 20 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி அவருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியிருந்ததாகவும், விசாரணை நடைபெறவிருந்த நாளில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் ஊடகங்கள் மூலம் தமிழக காவல்துறை அவதூறு செய்தி பரப்பி வருகிறது. அதாவது முத்துக்குமாரசாமியிடம் வருமான வரித்துறை அழைத்து விசாரணை நடத்தும் அளவுக்கு பணம் இருந்தது, வருமானவரித் துறையின் விசாரணைக்கு பயந்து தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது தான் தமிழக காவல்துறையின் நோக்கம்.

உண்மையில், முத்துக்குமாரசாமியிடம் அவர் செய்த முதலீடுகள் குறித்து விசாரிப்பதற்காக வருமான வரித்துறை சம்மன் அனுப்பவில்லை. அவர் வீடு வாங்குவதற்காக முன்பணம் கொடுத்திருந்த நிறுவனம் ரூ.2.30 கோடியை முன்பணமாக வசூலித்திருந்ததாக வருமானவரி ஆய்வில் தெரியவந்திருந்தது. இதுகுறித்து முன்பணம் கொடுத்த 47 பேரிடமும் விசாரிப்பதற்காக அவர்கள் அனைவரையும் வருமானவரித்துறை அழைத்திருந்தது. முத்துக்குமாரசாமி உள்ளிட்ட அனைவரும் சாட்சிகளாகத் தான் அழைக்கப்பட்டிருந்தார்களே தவிர குற்றஞ்சாற்றப்பட்டவர்களாக அழைக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, முத்துக்குமாரசாமி 35 ஆண்டுகளாக அரசுத்துறையில் பணியாற்றி வந்தவர்- கடைசியாக அவர் மாதம் ரூ.88 ஆயிரம் அளவுக்கு ஊதியம் பெற்றுள்ளார். அவரது இரு மகன்கள் நல்ல ஊதியத்தில் வேலையில் இருக்கிறார்கள். இத்தகைய சூழலில் ரூ.13.50 லட்சம் எப்படி வந்தது? என வருமானவரி துறைக்கு கணக்கு காட்ட முடியாமல் தான் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்டார் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த ஊடகங்களின் உதவியுடன் காவல்துறை முயல்வது வெட்கக்கேடானது.

அதுமட்டுமின்றி, பிப்ரவரி மாதத்தின் முதல் 20 நாட்களில் செல்பேசி மூலம் 600 அழைப்புகளை செய்திருப்பதையும் பூதாகரமாக சித்தரிக்க காவல்துறை முயன்றிருக்கிறது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அமைச்சரின் உதவியாளர்கள் உள்ளிட்ட பலரும் அவருடன் பேசியியுள்ளனர்; அவரும் இப்பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக பலரை தொடர்பு கொண்டிருக்கிறார். முத்துக்குமாரசாமியின் தொலைபேசி அழைப்புக்களில் சர்ச்சை எதுவும் இல்லை என்பதை நன்றாக தெரிந்து கொண்டே அதை காவல்துறை பெரிய செய்தியாக்கியிருப்பது நேர்மையான செயல் அல்ல.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நாளை தொடங்கவிருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சினையை எழுப்பக் கூடாது என்பதற்காகவே இப்படி ஒரு செய்தியை தமிழக காவல்துறை திட்டமிட்டு பரப்பியிருக்கிறது. ஊழல்வாதிகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நேர்மையான அதிகாரி மீது அவதூறு சேற்றை அள்ளி காவல்துறை பூசியிருக்கிறது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சரின் உதவியாளர்கள் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த செய்திகளை அவசரமாக மறுத்த காவல்துறை, பாதிக்கப்பட்டவர் குறித்து அவதூறு செய்தி பரப்புவதிலிருந்தே அதன் உண்மையான நோக்கத்தை உணரலாம்.

ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையானதாக கருதப்பட்ட தமிழக காவல்துறையின் பெருமை இப்படி ஒரு மோசமான நிலைக்கு சென்றுவிட்டது வேதனையளிக்கிறது. வழக்கையே அடியோடு திசை திருப்ப முயலும் தமிழக காவல்துறை, இந்த வழக்கை நேர்மையாக விசாரித்து உண்மையைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கை தமிழகத்தில் யாருக்கும் இல்லை. எனவே, அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும். முத்துக்குமாரசாமி குறித்து அவதூறு தகவல்களை ஊடகங்களுக்கு பரப்பிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக முத்துக்குமாரசாமியின் தற்கொலைக்கு காரணமான முன்னாள் அமைச்சர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக கைது செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x