

படாளதை அடுத்த தண்டலம் கிராமத்துக்குச் செல்லும் பாதையில் செங்கல்பட்டு, விழுப்புரம் செல்லும் ரயில்வே தண்டவாளம் குறுக்கிடுவதால், கிராம மக்களின் போக்குவரத்துக்காக அந்தப் பகுதியில் சுரங்கப் பாதை அமைக்கக் கோரி, கிராம வாசிகள் ரயில் மறியல் முயற்சியில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தண்டலம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கிராம மக்கள் தங்களின் பல்வேறு தேவைகளுக்காக, படாளம், மதுராந்தகம் பகுதிகளுக்குச் செல்ல படாளம் சாலையைப் பயன்படுத்துகின்றனர். இந்த சாலையில், செங்கல்பட்டு, மதுராந்தகம் செல்லும் ரயில்வே தண்டவாளம் குறுக்கிடுகிறது. இதனால், மக்கள் தண்டவாளத்தை கடக்கும்போது விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே, அப்பகுதியில் சுரங்கப் பாதை அமைத்து தர வேண்டும் என்கிற தங்களின் நீண்டநாள் கோரிக்கையை வலியுறுத்தி தண்டலம் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ரயில் மறியல் முயற்சியில் ஈடுபட்டனர். தகவலறிந்த செங்கல்பட்டு ரயில்வே போலீஸார் மற்றும் படாளம் போலீஸார், ரயில்வேதுறை அதிகாரிகள், மதுராந்தகம் கோட்டாட்சியர் பர்கத் பேகம் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கிராம மக்கள் போக்குவரத்துக்காக தற்போது உள்ள பாதையில் இருந்து 200 மீட்டர் அருகே உள்ள மழைநீர் செல்லும் சுரங்கப் பாதையை, சீரமைத்து தருவதாகவும். மேலும், புதிய சுரங்கப் பாதை அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, கிராம மக்கள் களைந்து சென்றனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் கூறியதாவது:
ஏற்கெனவே உள்ள பாதைக்கு அருகில் உள்ள சுரங்கப் பாதையை கிராம மக்களின் பயன்பாட்டுக்கு சீரமைத்து தருவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், புதிய சுரங்கப் பாதை அமைக்க 2.5 கோடி நிதி தேவைப்படும் என்பதால், அரசிடம் பரிந்துரை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.