Published : 16 Mar 2015 09:46 AM
Last Updated : 16 Mar 2015 09:46 AM

‘ஆட்டிசம்’ குறைபாடு உள்ள குழந்தைகளின் மாரத்தான் போட்டி

‘ஆட்டிசம்’ என்ற குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கான மாரத்தான் போட்டி சென்னையில் நேற்று நடைபெற்றது. ‘வல்லமை’ என்ற இந்தப் போட்டி இரண்டாவது ஆண்டாக நடத்தப்படுகிறது.

ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 70 குழந்தைகள் பங்கேற்றனர். மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்து நடிகர் பிருத்விராஜ் பேசும்போது, “எல்லா பெற்றோர்களுக்கும் இது போன்ற சிறப்பு குழந்தைகள் கிடைப்பதில்லை. கடவுள் சில பெற்றோர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் இந்த குழந்தைகளை கொடுத்தால் நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்று ஒப்படைத்திருக்கிறார்” என்றார்.

கீழ்ப்பாக்கம் பாலவிஹார் பள்ளி மற்றும் ஒய்.எம்.சி.ஏ. பள்ளிகளை சேர்ந்த 9 வயது முதல் 24 வயது வரை உள்ள மாணவர்கள் 1.5 கி.மீ. மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர். அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் கொடுக்கப்பட்டன.

‘வல்லமை’ போட்டியை 25 பேர் கொண்ட ஐ.டி. நிறுவனப் பணியாளர்கள் தனசேகர் மற்றும் குழுவினர் நடத்தி வருகின்றனர். அந்த குழுவின் உறுப்பினர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சபரிவாஸ் கூறும்போது, “நாங்கள் ஈட்டும் வருவாயில் ஒரு பகுதியை இந்தச் சமூகத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். அதிக விழிப்புணர்வு இல்லாத ‘ஆட்டிசம்’ குறைபாடு உள்ள குழந்தைகளை ஊக்கப்படுத்தலாம் என்று முடிவு செய்தோம். ‘ஆட்டிசம்’ குறைபாடு கொண்ட குழந்தைகள் எல்லோரையும் போல் உடல் வலிமை பெற்றவர்கள் என்பதை மக்களுக்கு தெரிவிப்பதே இந்த போட்டியின் நோக்கம்’’ என்றார்.

இந்த நிகழ்வில் ஓய்வுபெற்ற நீதிபதி ரங்கராஜன், திரைப்பட சண்டைப் பயிற்றுநர் பெசண்ட் ரவி ஆகியோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x