Last Updated : 17 Mar, 2015 04:35 PM

 

Published : 17 Mar 2015 04:35 PM
Last Updated : 17 Mar 2015 04:35 PM

புதுச்சேரி: அரிய வகை ஆமைக் குஞ்சுகளை கடலில் விட்டது வனத்துறை

புதுச்சேரி அருகே நரம்பை கடற்கரையில் பாதுகாத்து வைத்திருந்த முட்டைகளில் இருந்து வெளிவந்த ஆமைக் குஞ்சுகளை, வனத்துறை அதிகாரிகள் இன்று கடலில் விட்டனர்.

இந்திய ஆழ்கடல் பகுதிகளிலுள்ள ‘ஆலிவ் ரெட்லி’ அபூர்வ வகை ஆமைகள், முட்டையிட ஆண்டு தோறும் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை, இந்திய கடற்கரை பகுதியை நோக்கி, படையெடுப்பது வழக்கம். முட்டைகளை இட்டுவிட்டு மீண்டும் கடலுக்கு சென்றுவிடும்.

25 ஆண்டுகள் கடந்தாலும் மீண்டும் முட்டையிட்ட பகுதிக்கு திரும்பும் அரிய வகை இனம் இந்த ஆமை வகை. இவ்வாறு வரும் ஆமைகள் மீனவர் படகின் இயந்திரங்களில் சிக்கியும், சீதோஷணம் சூழ்நிலை காரணமாகவும், பெருமளவில் இறந்து விடுகின்றன.

இந்த அரிய வகை ஆமைகளை பாதுகாக்கும் பொருட்டு புதுச்சேரியில் வனத்துறையினர் முயற்சி மெற்கொண்டு வருகின்றனர். ஆண்டு தோறும் வனத்துறை அதிகாரிகள் புதுச்சேரி எல்லைக்குட்பட்ட கடற்கரை பகுதிகளில் ஆமைகள் இட்டுவிட்டு செல்லும் முட்டைகளை எடுத்து பாதுகாத்து, பொறித்த பின்னர், கடலில் எடுத்து விட்டு ஆமை இனத்தை பாதுகாத்து வருகின்றனர்.

அது போல் இந்த ஆண்டு புதுச்சேரி அடுத்த கிரும்பாக்கம் அருகே உள்ள நரம்பை, மூர்த்திக்குப்பம் புதுக்குப்பம், பூரணாங்குப்பம் புதுக்குப்பம், நல்லவாடு ஆகிய மீனவ கிராம கடற்கரையில் ஆமைகள் முட்டைகள் இட்டன.

தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், அந்தந்த மீனவ கிராம மக்கள் உதவியுடன் "ஆலிவ் ரெட்லி’’இன வகையைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட ஆமைகளின் 1,560 முட்டைகள் பாதுகாப்பாக எடுத்து வரப்பட்டு நரம்பை கடலோரத்தில் பாதுகாப்பாக மணலுக்குள் புதைத்து வைத்தனர். அந்த இடத்தில் வட்டமிட்டு வலைகள் அமைத்து பாதுகாத்து வருகின்றனர்.

இதே போல், காலாப்பட்டு உள்ளிட்ட வட்டாரப்பகுதிகளின் கடற்கரையில் சேகரிக்கப்பட்ட 650 முட்டைகள் காலாப்பட்டு கடற்கரையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இதில் நரம்பை கடற்கரை பகுதியில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த முட்டைகளில் இருந்து சில தினங்களுக்கு முன்பு 75 ஆமை குஞ்சுகள் வெளியே வந்தன இந்த ஆமை குஞ்சுகளை புதுச்சேரி வனத்துறை பாதுகாவலர் குமார், துணை வன பாதுகாவலர் சத்தியமூர்த்தி மற்றும் வனத்துறை ஊழியர்கள் இன்று பாதுகாப்பாக கடலில் விட்டனர். மீதமுள்ள ஆமை முட்டைகள், பாதுகாக்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x