Published : 07 Mar 2015 11:46 AM
Last Updated : 07 Mar 2015 11:46 AM

மகளிர் நிம்மதிக்கு மது ஒழிக்கப்படவேண்டும்: ராமதாஸ்

மகளிர் தினம் கொண்டாடும் வேளையில், மகளிருக்கு உண்மையான சுதந்திரமும், நிம்மதியும் கிடைக்க வேண்டுமானால் அதற்கான முதல்படியாக மது ஒழிக்கப்படவேண்டும். அந்த இலக்கை நோக்கி போராட இந்நாளில் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மகளிருக்கு சமத்துவமும், சம உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்பதன் அவசியத்தையும் வலியுறுத்தும் வகையில் சர்வதேச மகளிர் நாள் கொண்டாடப்படும் நிலையில் மகளிர் சமுதாயத்திற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகளிர் நாள் நூற்றாண்டுகளைக் கடந்த வரலாறு கொண்டதாகும். 1789 ஆம் ஆண்டில் பிரெஞ்சுப் புரட்சியின்போது சமத்துவம், சுதந்திரத்துவம், வாக்குரிமை ஆகிய மூன்றையும் வலியுறுத்தி பாரிஸ் நகரில் பெண்கள் போராடத் தொடங்கியது தான் மகளிர் நாள் கொண்டாடப்படுவதற்கான தொடக்கம் ஆகும்.

அதன் பின் உலகம் முழுவதும் உள்ள மகளிர் தங்களின் கோரிக்கைக்காக குரல் கொடுத்த நிலையில் 1911 ஆம் ஆண்டில் தான் சர்வதேச மகளிர் நாளை ஐ.நா. முறைப்படி அறிவித்தது.

பிரான்ஸ் நாட்டு மகளிர் நடத்திய போராட்டத்தையும், அந்தப் போராட்டத்திற்கு பணிந்து மகளிருக்கு வாக்குரிமை அளித்து அந்நாட்டு மன்னர் லூயிஸ் பிளாங்க் மார்ச் 8 ஆம் தேதி உத்தரவிட்டதையும் நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் நாள் கொண்டாடப்படுகிறது.

இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் மகளிருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுவிட்ட போதிலும் சமத்துவம், சுதந்திரம் போன்றவை மகளிருக்கு தொடுவானமாகவே தோன்றுகின்றன.

குறிப்பாக டெல்லி மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முகேஷ்சிங் என்ற குற்றவாளி தனது செயலை நியாயப்படுத்தும் வகையில் கூறியுள்ள கருத்துக்கள் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்துகின்றன.

மற்றொரு பக்கம் தமிழகத்தில் மகளிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுகிறது. கடந்த 44 மாதங்களில் மட்டும் தமிழகத்தில் 4697 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

சமூகச் சூழலை எடுத்துக் கொண்டால்,தமிழகத்தில், பெரும்பாலான அடித்தட்டு மற்றும் நடுத்தர குடும்பத்து பெண்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. இதற்கான அடிப்படைக் காரணம் மது தான்.

குடும்பங்களைச் சீரழிக்கும் மதுவை அரசே விற்பனை செய்து கொண்டு, அரசே மகளிர் நாளையும் கொண்டாடுவது முரண்பாடுகளின் உச்சமாகவே இருக்கும். மகளிருக்கு உண்மையான சுதந்திரமும், நிம்மதியும் கிடைக்க வேண்டுமானால் அதற்கான முதல்படியாக மது ஒழிக்கப்படவேண்டும். அந்த இலக்கை நோக்கி போராட இந்நாளில் அனைவரும் உறுதியேற்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x