

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மற்றும் அருணோதயா குழந்தை தொழிலாளர் மையம் இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாமில், சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் 495 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் படித்துவிட்டு வேலைதேடும் இளைஞர்களுக்கு உதவுவதற்காக, அருணோதயா குழந்தை தொழிலாளர் மையம் மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துடன் இணைந்து நேற்று வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. எண்ணூரில் உள்ள ஏஐஆர் சமூகநலக் கூடத்தில் நடைபெற்ற இந்த முகாமை, முதன்மை சமுதாய வளர்ச்சி அலுவலர் எட்விக் ரோசி தொடங்கி வைத்தார். அருணோதயா அமைப்பின் செயல் இயக்குநர் விர்ஜில் டி சாமி முன்னிலை வகித்தார்.
இந்த முகாமில், வங்கி, பிபிஓ, டெலிமார்க்கெட்டிங், ஹவுஸ்கீப்பிங், மார்க்கெட்டிங், சேல்ஸ், சாப்ட்வேர் உள்ளிட்ட 25 நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த வேலைவாய்ப்பு முகாமில், மொத்தம் 897 பேர் பங்கேற்றனர். இதில், 495 பேர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 149 பேருக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட இவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6,500லிருந்து அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் வரை ஊதியம் கிடைக்கும்.