Published : 23 Mar 2015 01:17 PM
Last Updated : 23 Mar 2015 01:17 PM

தமிழகத்தில் மார்ச் 28-ல் முழு அடைப்பு: திமுக ஆதரவு

மேகேதாட்டுவில் தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் 28-ம் தேதி நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு திமுக ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

கர்நாடக அரசின் இந்த போக்கை கண்டித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் வரும் 28-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன. இந்நிலையில் இதற்கு ஆதரவு தெரிவித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்நாடகா அரசு தற்போது மேகதாதுவில் அணைகளைக் கட்டமேற்கொண்டிருக்கும் இந்த முயற்சி, நடுவர் மன்றத்தின் முடிவுக்கு முற்றிலும் எதிரானது என்பதுடன், இதுகுறித்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கின்ற போது, அந்தத் தீர்ப்புக்காகக் காத்திருக்காமல், குறுக்கு சால் ஓட்டுவதைப் போன்றதுமாகும்.

இதுபற்றி கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டியில், "கர்நாடக அரசின் நடவடிக்கையை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்வது அந்த மாநிலத்திற்கு எந்தப் பயனும் ஏற்படுத்தாது. தமிழக அரசு எந்த நடவடிக்கை மேற்கொண்டாலும் மேகதாது அருகே அணைகள் கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளது.

தமிழக அரசின் எதிர்ப்பு குறித்து கர்நாடகாவைச் சேர்ந்த யாரும் ஆதங்கப்பட வேண்டாம். இரு அணைகள் கட்டும் கர்நாடக அரசின் முடிவை சட்டத்தால் தடுக்க முடியாது" என்றெல்லாம் கூறிய போதும், தமிழக அரசின் சார்பில் டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்iப் பாதுகாத்திட முதலமைச்சர் வாயே திறக்கவில்லை என்பதோடு, தமிழகத்திலே உள்ள எதிர்க்கட்சிகள் எல்லாம் இதுபற்றிக் கலந்தாலோசிக்க அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துப் பேச வேண்டுமென்று கேட்டுக் கொண்டதையும் பொருள்படுத்தவில்லை.

மாறாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினால், கடமையெல்லாம் முடிந்து விட்டது என்று கருதிக் கொண்டு அதையே செய்து காலங்கழித்து வருகிறார்கள். ஒருவேளை இன்றைய முதலமைச்சர் அனைத்துக் கட்சித் தலைவர்களை யெல்லாம் அழைத்துக் கூட்டம் நடத்தினால், முன்னாள் முதல் அமைச்சர் என்ன சொல்வாரோ என்று பயந்து கொண்டிருக்கிறாரோ என்னவோ? ஏனென்றால் மத்திய அரசு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்த போதும், ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்த போதும், தமிழக முதலமைச்சர், நிதியமைச்சர் என்ற முறையில் அரசின் சார்பில் எவ்விதக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இந்தப் பிரச்சினையில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. அலட்சியமாக இருந்த போதிலும், காவிரி டெல்டா மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், பி.ஆர். பாண்டியனும், மற்றும் அந்த அமைப்பின் நிர்வாகிகளும் பெரு முயற்சி எடுத்து, தமிழகத்திலே உள்ள ஆளுங்கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளையும் நேரிலே அழைத்து 21-3-2015 அன்று சென்னையில் கூட்டிய கூட்டத்தில் வரும் 28ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு (பந்த்) போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆளுங்கட்சிக்கு அவர்கள் அழைப்பு விடுத்தும், அந்தக் கூட்டத்தை அவர்கள் புறக்கணித்து விட்டார்கள். கழகத்தின் சார்பில் செய்தித் தொடர்பாளர் தம்பி டி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு, கழகத்தின் ஆதரவினைத் தெரிவித்திருக்கிறார்.

புதிய அணைகளைக் கட்டுவதற்காக மத்திய அரசு மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதியைக் கூடப் பெறாமல், அண்மையில் கர்நாடக அரசு தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் மேகதாது அணைகள் கட்டுவதற்காக 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறது. இதையெல்லாம் கண்டிக்கும் நிலையில் 21ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் 28ஆம் தேதி முழு அடைப்பு நடத்தவும், அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒருங்கிணைந்து பிரதமரை நேரில் சந்தித்துக் கோரிக்கையை வலியுறுத்தவும், தமிழகஅரசின் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கை தமிழக அரசு விரைவுப் படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதை வற்புறுத்தவும் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

இதற்குப் பிறகாவது இந்தப் பிரச்சினையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தமிழக ஆளுங்கட்சி விழித்துக் கொண்டு தமிழக விவசாயிகளின் தொடரும் துயரங்களைக் களைந்திட முன் வர வேண்டுமென்று வலியுறுத்துவதோடு, அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் நடத்த முன்வந்துள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தனது ஒத்துழைப்பையும், ஆதரவையும் நல்கும் என்பதை அறிவிக்கின்றேன்" இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x