

ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் பாஜக அரசின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்று திமுக செயற்குழு வலியுறுத்தியுள்ளது.
திமுக செயற்குழுக் கூட்டம், கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. காலை 11 மணி தொடங்கிய கூட்டம், மதியம் 2 மணி வரை நடந்தது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னணி தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியில் நிர்வாகக் குழப்பம் ஆழமாக வேரூன்றி, முக்கிய முடிவுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. மெட்ரோ ரயில் திட்டம் இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. மத்திய புள்ளியியல் துறை அறிக்கையின்படி, தொழில் உற்பத்தி வளர்ச்சியில் தமிழகம் கடைசி இடமான 18-வது இடத்தில் இருக்கிறது. செயலற்ற, சீர்கேடான நிலைக்கு தமிழகத்தை உள்ளாக்கிய அதிமுக அரசுக்கு இந்த செயற்குழு கண்டனம் தெரிவிக்கிறது.
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசும்போது, ‘மத ரீதியில் அபத்தமான கருத்துகள் தெரிவிக்கப்படுவதையும், பாகுபாடு காட்டுவதையும் என்னால் அனுமதிக்க முடியாது’ என்று கூறியுள்ளார். ஆனால், இந்தக் கருத்துக்கு முற்றிலும் முரணாக அந்தக் கட்சியைச் சேர்ந்த மற்றவர்கள் பேசி வருவது கண்டிக்கத்தக்கது.
சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் ஆகியோரைப் பற்றி அமைச்சர்களும், ஆளுங்கட்சி உறுப்பினர்களும் அனுமதிக்கக் கூடாத வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன. எனவே, இரு நாடுகளின் மீனவர் பிரதிநிதிகளை அழைத்து சமரசப் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஈழத் தமிழர் விவகாரத்தில் மத்திய பாஜக அரசின் நிலை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஏழை, எளிய, நடுத்தர மக்களைப் பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். மத்திய அரசு கொண்டுவரும் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 2014-ஐ கைவிட வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 3,500 ரூபாயும், நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரமும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.