Published : 02 Mar 2015 03:16 PM
Last Updated : 02 Mar 2015 03:16 PM

இலங்கை அரசின் ஏமாற்று வேலைகளுக்கு இந்தியா பலியாகக் கூடாது: திருமாவளவன்

தமிழர் பகுதிகளிலிருந்து இலங்கை ராணுவத்தை திரும்பப்பெற ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' ஐநா மனித உரிமைக் கவுன்சிலின் 28ஆவது கூட்டம் இன்று ஜெனிவாவில் தொடங்கியுள்ளது. இலங்கை அரசின் வேண்டுகோளை ஏற்று இந்தக் கூட்டத்தில் இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து சமர்ப்பிக்கப்படவிருந்த அறிக்கை செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதிய அதிபர் பதவியேற்று இத்தனை நாட்கள் ஆன பிறகும்கூட தமிழர் பகுதிகளிலிருந்து ராணுவத்தை வெளியேற்றவோ, ராணுவத்தால் அபகரிக்கப்பட்ட தமிழர்களின் நிலங்களைத் திருப்பிக்கொடுக்கவோ இலங்கை அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அதுபோலவே ஐந்து ஆண்டுகளுக்கு மேல் எந்தவித விசாரணையும் இல்லாமல் இரகசியச் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை விடுவிப்பது பற்றியும் இலங்கை அரசு வாய் திறக்கவில்லை.

போர்க்குற்ற அறிக்கை சமர்ப்பிப்பதை அடுத்த கூட்டத்துக்கு ஒத்தி வையுங்கள் எனக் கேட்ட இலங்கை அரசு இப்போது செப்டம்பரில் நடைபெறவுள்ள கூட்டத்திலும் அறிக்கையை சமர்ப்பிக்கவிடாமல் முட்டுக்கட்டை போடும்வகையில் பேசிவருகிறது. இலங்கையின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் அஜித் பெரெரா ‘செப்டம்பருக்குள் எங்களால் விசாரணையை முடிக்க முடியாது’ என இப்போது கூறியிருக்கிறார்.

பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு சிறிசேனாவின் கையில் அதிகாரம் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டால் அதன் பின்னர் அவரும் ராஜபக்சே போலத்தான் நடந்துகொள்வார் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைதுசெய்யப்படுகிறார்கள், இலங்கையின் சீன ஆதரவு நிலையிலும் பெரிதாக மாற்றம் இல்லை, இந்தியா பலமுறை வலியுறுத்தியும்கூட தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்து இலங்கை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, இலங்கையின் ஏமாற்று வேலைகளுக்கு இந்தியா பலியாகி விடாமல் இந்த ஐநா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் உறுதியான நிலைப்பாட்டை மேற்கொள்ளவேண்டும்.

தமிழர் பகுதிகளிலிருந்து ராணுவத்தை வெளியேற்றவும், அபகரிக்கப்பட்ட நிலங்களைத் திருப்பிக்கொடுக்கவும், சட்டவிரோதமாக ரகசியச் சிறைகளில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கைதிகளை விடுவிக்கவும், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை அளிக்கவும் இந்தியா வலியுறுத்தவேண்டும்.

வடமாகாண சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ‘இனப்படுகொலை’ தீர்மானத்தின் அடிப்படையில் ஐநா விசாரணையை விரிவுபடுத்த இந்தியா குரலெழுப்ப வேண்டும் என வலியுறுத்துகிறேன்'' என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x