Published : 17 Mar 2015 08:44 AM
Last Updated : 17 Mar 2015 08:44 AM

வாடகை பாக்கிக்காக சகாயம் அலுவலகத்தில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்: ஆட்சியர் உத்தரவால் ஒரு மணி நேரத்தில் அகற்றம்

வாடகை பாக்கிக்காக கிரானைட் வழக்குகளை விசாரிக்கும் சட்ட ஆணையர் உ.சகாயத்தின் அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆட்சியர் உத்தர விட்டதால் ஒரு மணி நேரத்தில் நோட்டீஸ் அகற்றப்பட்டது.

மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடுகளை விசாரிக்கும் உ.சகாயத்தின் அலுவலகம் பழைய ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மகளிர் வணிக வளாகத்தில் செயல்படுகிறது. ஊரக வளர்ச்சித்துறைக்கு சொந்தமான இக்கட்டிடத்தில் 32 கடைகள் உள்ளன. பெண்கள் முன்னேற்றத்துக்காக சுயதொழில் புரிவோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு இங்குள்ள கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாடியில் உள்ள அறைகள் சமூக தணிக்கைத் துறைக்கு வழங்கப் பட்டுள்ளன. இங்குள்ள கடைகளில் வாடகை வசூலித்து பராமரிக்கும் பொறுப்பு விக்கிரமங்கலம் ஊராட்சி அளவிலான பெண்கள் கூட்டமைப்புக்கு வழங்கப் பட்டுள்ளது. ஒரு கடையின் மாத வாடகையாக ரூ.300 வசூலிக் கப்பட்டது. இதை ரூ.1000 அல்லது வருவாயில் 20 சதவீதம் என உயர்த்தி கேட்கப்பட்டுள்ளது. இது அதிகம் எனக்கூறி வாடகையை தர பலரும் மறுத்ததுடன், பாக்கி வைத்துவிட்டனர். வாடகை பாக்கியை 15 நாளுக்குள் செலுத்தாவிடில், கடையை காலி செய்ய வேண்டிய நிலை உருவாகும் என தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குநர் பாண்டியன் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நோட்டீசை மகளிர் அமைப்பு நிர்வாகிகள் அனைத்து கடைகளின் முன் நேற்று மதியம் ஒட்டினர். அப்போது சகாயம் அலு வலகத்தின் வாசலிலும் ஒட்டிவிட்டு சென்றனர். சகாயம் சென்னையில் இருப்பதால், ஆய்வுக்குழுவினர் மட்டும் அலுவலகத்தில் இருந்தனர். நோட்டீசை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த குழுவினர், இதுகுறித்து உடனே சகாயத்துக்கும், மதுரை ஆட்சியர் இல.சுப்பிரமணியனுக்கும் தகவல் அளித்தனர். ஆட்சியரின் விசாரணையில், மகளிர் குழுவினர் சகாயம் அலுவலகம் என்பதை அறியாமல் நோட்டீசை ஒட்டியது தெரிந்தது. சகாயத்துக்கு அலுவலகத்தை ஒதுக்கியது மாவட்ட நிர்வாகம். இதனால் வாடகை பாக்கி இருந்தால், அதை மாவட்ட நிர்வாகம்தான் செலுத்த வேண்டும். இதை கவனிக்காமல் நோட்டீஸ் பிறப்பித்த இணை இயக்குநர், சகாயம் அலுவலகத்தையும் பாக்கி வைத்துள்ள கடைகளின் பட்டியலில் சேர்த்தது எப்படி என விசாரணை நடந்து வருகிறது. ஆட்சியர் உத்தரவின்பேரில் ஒரு மணி நேரத்துக்குள் சகாயம் அலுவலகத்தில் ஒட்டப்பட்ட நோட்டீஸை ஒட்டியவர்களே அகற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x