Published : 12 Mar 2015 08:58 AM
Last Updated : 12 Mar 2015 08:58 AM

மீத்தேன், மேகேதாட்டு அணை திட்டங்களை எதிர்த்து முற்றுகை: வைகோ உட்பட ஆயிரம் பேர் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மேகே தாட்டு என்ற இடத்தில் புதிய அணைகட்டும் கர்நாடக அரசைக் கண்டித்தும், மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்தும் நேற்று சென்னை சுங்க அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வைகோ உட்பட ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

கர்நாடகாவில் காவிரி ஆற்றின் டெல்டா பாசனப் பகுதியில் மேகே தாட்டு என்ற இடத்தில் புதிய அணையை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு இறங்கியுள்ளது. இதேபோல், தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்க தீர்மானித்துள்ளது. இத்திட்டங் களால் காவிரி டெல்டா பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளின் வாழ்வா தாரம் பாதிக்கக் கூடும் எனக் கூறி, காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மேற்கண்ட திட்டங்களை எதிர்த்து சென்னை யில் உள்ள மத்திய அரசின் சுங்க அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் காவிரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று நடை பெற்றது. இப்போராட்டத்துக்கு காவிரி பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமை வகித்தார்.

இதில், கூடங்குளம் அணு சக்தி திட்டத்துக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங் கிணைப்பாளர் உதயகுமார், தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செய லாளர் கோவை ராமகிருஷ்ணன், திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன், காவிரி விவசாயி கள் சங்கத் தலைவர் பாலசுப்பிர மணியன் உட்பட பலர் பங்கேற்ற னர். போராட்டத்தில் பங்கேற்று வைகோ பேசியதாவது:

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணை கட்டுதல், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் ஆகியவற்றை மத்திய அரசு கைவிட வேண்டும். இத்திட்டங்களால் தஞ்சை, திருவாரூர் மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள னர். காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டினால் மேட்டூருக்கு தண்ணீர் வராது. வீராணம் ஏரியிலும் போதுமான தண்ணீர் இல்லை.

இதனால், சென்னையிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும். கர்நாட காவில் உள்ள 11 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களை பாதுகாப் பதற்காக காவிரி ஆற்றில் அணை கட்டுவதாக அம்மாநில முதல்வர் கூறியுள்ளார். இந்தத் தகவல் காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரானது.

தமிழகத்தில் 16 மாவட்டங் களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளது.

ஐந்து கோடி மக்களும், மூன்று கோடி விவசாய மக்களும் பாதிப்படைந்துள்ளனர். இப் போராட்டம் இறுதிப் போராட்டம் அல்ல. வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து நடைபெறும். வரும் ஏப்ரல் 7-ம் தேதி நரிமணம் மற்றும் நல்லூரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை எதிர்த்து முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு வைகோ பேசினார்.

முன்னதாக, தடையை மீறி சுங்க அலுவலகத்தை முற்றுகை யிட முயன்ற வைகோ உட்பட ஆயிரம் பேர் கைது செய்யப் பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x