Published : 29 Apr 2014 09:38 AM
Last Updated : 29 Apr 2014 09:38 AM

4 அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி ஏற்பு

மாநிலங்களவை உறுப்பினர் களாக அஇஅதிமுக-வைச் சேர்ந்த எஸ்.முத்துகருப்பன், கே.செல்வராஜ், சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த் ஆகிய நால்வரும் திங்கள்கிழமை பதவி ஏற்றனர்.

இவர்களுக்கு மாநிலங் களவைத் தலைவரும் துணை குடியரசுத் தலைவருமான ஹமீது அன்சாரி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்த பதவியேற்பு விழா, நண்பகல் சுமார் 12 மணிக்கு நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைத் தலைவர் அறையில் மிகவும் எளிய முறையில் நடந்தது.

இவர்கள் அனைவரும் கடந்த பிப்ரவரி 7-ம் தேதி நடந்த மாநிலங்களவை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவர். இதில், திமுக உறுப்பினர் திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் தவிர்க்க முடியாத காரணங்களால் இன்று பதவியேற்கவில்லை. இந்த இருவரும் பின்னர் ஒரு தேதி முடிவு செய்து தனியாக பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில், 233 பேர் நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எஞ்சிய 12 பேர் நியமன உறுப்பினர்கள். இவர்களை குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்.

தமிழக மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 18. இதில் அதிமுகவின் பலம் தற்போது 10 ஆக உயர்ந்துள்ளது. திமுகவின் பலம் தற்போது 5 ஆக கூடினாலும், சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை பெற்றதால் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் திமுகவின் பலம் 4 ஆகிறது.

இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சார்பில் தலா 1 உறுப்பினர்கள் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x