9,000 செல்வமகள் புதிய கணக்குகள்: ஞாயிறன்றும் இயங்கிய அஞ்சல் நிலையங்கள்

9,000 செல்வமகள் புதிய கணக்குகள்: ஞாயிறன்றும் இயங்கிய அஞ்சல் நிலையங்கள்
Updated on
1 min read

செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்காக சென்னை மண்டலத்தில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று அஞ்சல் நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன. நேற்று மட்டும் 9,000 கணக்குகள் தொடங்கப்பட்டதாக மண்டல அஞ்சல்துறை அதிகாரி மெர்வின் அலக்சாண்டர் கூறினார்.

பெண் குழந்தைகளின் பாதுகாப்பையும் எதிர்கால நலனையும் வலியுறுத்தி பிரதமர் மோடி சுகன்யா சம்ரிதி என்னும் அஞ்சலக சேமிப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் தமிழகத்தில் செல்வமகள் சேமிப்புத்திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின்படி 10 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகள் கணக்கு தொடங்கலாம். இதற்கு அதிக வட்டி கிடைக்கும்.

இந்த திட்டத்துக்கு பொது மக்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் வசதிக்காக கடந்த 22 மற்றும் 29-ம் தேதி (நேற்று) ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை மண்டலத்துக்குட்பட்ட முக்கிய அஞ்சல் நிலையங் கள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் சென்னை மண்டலத்துக்குட்பட்ட வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஞாயிற்றுக் கிழமையான நேற்று அஞ்சல் நிலையங்கள் இயங்கின.

இது தொடர்பாக சென்னை மண்டல அஞ்சல் துறை அதிகாரி மெர்வின் அலக்சாண்டர் கூறும்போது, “செல்வமகள் சேமிப்புத்திட்டத்துக்கு நல்ல அளவில் வரவேற்பு உள்ளது. எனவே, சென்னை நகர மண்டலத்தில் உள்ள 20 தலைமை அஞ்சல் நிலையங்கள் மற்றும் 185 துணை அஞ்சல் நிலையங்கள் கடந்த 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும், 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் திறக்கப்பட்டிருந்தன. கடந்த 22-ம் தேதி மட்டும் 5,500 கணக்குகள் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ் சென்னை மண்டலத்தில் தொடங்கப்பட்டன. இதே போல் 29-ம் தேதி (நேற்று) சுமார் 9000 கணக்குகள் சென்னை மண்டலத்தில் தொடங்கப்பட்டன” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in