

கரூர் அருகேயுள்ள புலியூரை சேர்ந்த முருகேசன் என்பவர் ‘பாலச் சந்திரன் என்றொரு பெயரும் எனக்குண்டு’ என்ற புத்தகத்தை கடந்த டிசம்பரில் வெளியிட்டார். இதில் ஒரு பிரிவினர் குறித்து மோசமாக குறிப்பிட்டுள்ளதாகக் கூறி, அப்பிரிவினர் பிப்.25-ல் கரூரில் மறியலில் ஈடுபட்டதுடன், இது குறித்து ஆட்சியரிடம் மறுநாள் மனு அளித்தனர்.
இந்நிலையில் கொங்கு மக்கள் பேரவை சார்பில், எழுத்தாளர் புலியூர் முருகேசனை கண்டித்தும், அவரை கைது செய்யவும், நூலை தடை செய்யவும், ஒரு பிரிவினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற வலியுறுத்தியும், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்காத அரசியல் கட்சிகளை கண்டித்தும் கரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடுகளில் நேற்று கருப்புக் கொடி ஏற்றப்பட்டது.
முன் ஜாமீன் மனு விசாரணை
எழுத்தாளர் புலியூர் முருகேசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஒரு பிரிவினர் அளித்த புகாரின் பேரில், எழுத்தாளர் முருகேசன் மீது கலவரத்தை தூண்டும் வகை யில் எழுதியது மற்றும் ஆபாசமாக எழுதியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் பசுபதிபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இவ்வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி புலியூர் முருகேசன் சார்பில் அவரது வழக்கறிஞர் ராஜேந் திரன் கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, அமர்வு நீதிபதி எம்.குணசேகரன் முன்னிலையில் நாளை (மார்ச் 5) விசாரணைக்கு வருகிறது.