Published : 26 Mar 2015 08:49 AM
Last Updated : 26 Mar 2015 08:49 AM

4 நாட்கள் மட்டுமே பட்ஜெட் கூட்டத்தொடர்: மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் குறித்து பின்னர் முடிவு

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் 4 நாட்கள் மட்டுமே நடக்கிறது. மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் குறித்து அலுவல் ஆய்வுக்குழு பிறகு கூடி முடிவு செய்யும் என்று பேரவைத் தலைவர் ப.தனபால் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. 2015-16-ம் ஆண்டுக்கான பட் ஜெட்டை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அதை யடுத்து பேரவை ஒத்திவைக்கப் படுவதாவும், மீண்டும் 27-ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு கூடும் என்றும் பேரவைத் தலைவர் ப.தனபால் அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து பேரவைத் தலைவர் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற திமுக கொறடா சக்கரபாணி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இருவரும், தங்கள் கோரிக்கை ஏற்கப்படாததால் வெளிநடப்பு செய்தனர். 30 நிமிடம் நடந்த அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் எடுத்த முடிவு பற்றி நிருபர்களிடம் பேரவைத் தலைவர் ப.தனபால் கூறியதாவது:

பேரவை 27-ம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் கூடியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப் படும். அதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்கும். 28-ம் தேதி 2015-16 நிதியாண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகள் பேரவை யில் வைக்கப்படும். முன்பண மானியக் கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்க சட்டமுன்வடிவு அறி முகம் செய்யப்பட்டு, விவாதமின்றி நிறைவேற்றப்படும். அதன்பின்னர், பட்ஜெட் மீது 2-வது நாளாக விவாதம் தொடரும். 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.

30 மற்றும் 31 தேதிகளில் பொது விவாதம் தொடர்ந்து நடக்கும். 31-ம் தேதி விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உரை யாற்றுவார். அத்துடன் பேரவை நிகழ்ச்சிகள் நிறைவுபெறும். பேரவை நடக்கும் 4 நாட்களிலும் கேள்வி நேரம் உண்டு.

அலுவல் ஆய்வுக் குழு மீண்டும் கூடி, பேரவையின் அடுத்த நிகழ்ச்சிகள் குறித்தும் (மானியக் கோரிக்கைகள் தாக்கல்) எத்தனை நாட்கள் பேரவையை நடத்துவது என்பது குறித்தும் விவாதித்து முடிவெடுக்கும்.

இவ்வாறு பேரவைத் தலைவர் ப.தனபால் தெரிவித்தார்.

‘வழக்கமாக பட்ஜெட் மீதான பொதுவிவாதம் முடிந்ததும் துறை வாரியான மானியக் கோரிக் கைகள் மீதான விவாதம் நடக்கும். இந்தாண்டு அதுபோல தொடர்ச்சி யாக விவாதம் நடக்காததற்கு என்ன காரணம்?’ என்று கேட்டபோது, ‘இது குறித்து அலுவல் ஆய்வுக் குழு தான் முடிவு செய்யும்’ என்றார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள தேமுதிக எம்எல்ஏக்களை பட்ஜெட் கூட்டத் தொடரில் அனுமதிக்க வேண்டும் என்று சில கட்சிகள் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் கேட்டுக் கொண்டுள்ளதே என்ற கேள்விக்கு ‘பார்க்கலாம்’ என்று மட்டும் தனபால் பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x