

மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டுவதை எதிர்த்து புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக கோரியுள்ளது.
அதிமுக எம்எல்ஏ அன்பழகன் புதுச்சேரியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் 2 புதிய அணைகளை கட்ட கர்நாடக சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றி, நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனை தடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதே போன்று ஜெயலலிதா அறிவுறுத்த லின்படி தமிழக சட்டப்பேரவை யில் அனைத்து கட்சி ஆதர வுடன் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. ஆனால் காரைக்கால் மாவட்ட விவசாயிகளின் ஜீவாதார பிரச்சினையான காவிரி நதிநீர் பிரச்சினையில் புதுச்சேரி அரசு தொடர்ந்து அலட்சியத்துடன் நடந்து வருகிறது.
காவிரியின் கடைமடைப் பகுதியான காரைக்கால் பகுதி விவசாயிகள் காவிரி நீரையே முழுமையாக நம்பியுள்ளனர். காவிரி நீரை பெற தமிழகத்துடன் இணைந்து செயல்பட வேண்டிய முதல்வர் ரங்கசாமி காவிரி நீர் பிரச்சினையில் மவுனம் காத்து, தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறார்.
புதுச்சேரி சட்டப்பேரவையிலும் மேகேதாட்டு அணை பிரச்சினை தொடர்பாக தீர்மானம் கொண்டுவராமல் கடைசி நாளில் அரை மணிநேரத்தில் சட்டப்பேரவையை முடித்து விட்டார். எனவே புதுச்சேரி அரசு காரைக்கால் விவசாயிகளின் நலன் காக்க காவிரியின் குறுக்கே கட்டப்பட இருக்கும் 2 புதிய அணைகளையும் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்த ஓரிரு தினங்களில் சட்டப்பேரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.