Published : 12 Mar 2015 09:07 AM
Last Updated : 12 Mar 2015 09:07 AM

மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் 2 பேராசிரியை உட்பட 4 பேர் மீது வழக்கு: 2-வது நாளாக மாணவர்கள் போராட்டம்

தூத்துக்குடி அருகே தனியார் பொறியியல் கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக 2 பேராசிரியைகள் உட்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி பூபால்ராயர்புரம் 1-வது தெருவை சேர்ந்தவர் ஜோ. ரவீந்திரன் (40). இவரது மகள் வாகைகுளம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

இவர் தேர்வின்போது காப்பி யடித்ததாகக் கூறப்படுகிறது. இதை பேராசிரியைகள் சிலர் கண்டித்துள்ளனர். இதனால் அவமானமடைந்த மாணவி திடீரென 2-வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவரது முதுகுத் தண்டு உடைந்தது. தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மாணவியின் தந்தை ஜோ. ரவீந்திரன் சாயர்புரம் போலீஸில் அளித்த புகாரின் பேரில் பேராசிரியைகள் ஹேமா, பத்மா, உடற்கல்வி ஆசிரியை மெர்சி, உடற்கல்வி ஆசிரியர் அசோக் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

2-வது நாளாக போராட்டம்

இந்நிலையில் சக மாணவர்கள் மற்றும் காயமடைந்த மாணவியின் உறவினர்கள் நேற்று இரண்டாவது நாளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சுமார் 200 பேர் ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர். பின்பு ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அவர்கள் ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (பொது) புரூஸை சந்தித்து, மாணவியை தற்கொலைக்கு தூண்டிய பேராசிரியைகள், கல்லூரி நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவியின் மருத்துவ சிகிச்சைக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x