

சென்னையில் கோயம்பேடு ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயிலை இயக்குவதற்கு முன்பாக பாதுகாப்பு தன்மைகளை ஆராயும் பணிகள் வரும் 20 முதல் 24-ம் தேதி வரை நடக்கவுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ரூ.20 ஆயிரம் கோடி செலவில் இருவழித் தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், இரண்டாவது பாதையில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே 13 கி.மீ. தூரத்துக்கு பணிகள் முடிவடைந்து கடந்த ஓர் ஆண்டாக பல்வேறு சோதனைகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
ரயில் பாதைகள், ரயில் பெட்டிகள், ரயில் நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள், சிக்னல்கள், 2000 வரைபடங்கள், மென்பொருட்கள் உள்ளிட்டவை தொடர்பான 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட பாதுகாப்பு ஆவண அறிக்கை ஏற்கெனவே மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையரகத்தில் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 4 பேர் கொண்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையரக அதிகாரிகள் குழு வரும் 20-ம் தேதி பெங்களூரில் இருந்து சென்னை வருகிறது.
அக்குழுவினர் அடுத்த 4 நாட்களுக்கு பல்வேறு இறுதிக் கட்ட ஆய்வுப் பணிகளை மேற் கொள்ளவுள்ளனர். இதையடுத்து, தமிழக அரசு இத்திட்டத்தை மக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.