Published : 17 Mar 2015 08:55 AM
Last Updated : 17 Mar 2015 08:55 AM

திமுக நிர்வாகியிடமிருந்து நிலத்தை மீட்டுத் தரவேண்டும்: அமைச்சரிடம் ஹெச்.ராஜா நேரில் கோரிக்கை

காரைக்குடியில் திமுக முன்னாள் நகர்மன்றத் தலைவரால் ஆக்கிரமிக்கப்பட்ட மூதாட்டி ஒருவரின் இடத்தை மீட்டுக் கொடுக்கக் கோரி பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா வீட்டுவசதித் துறை அமைச்சரிடம் நேரில் மனு கொடுத்தார்.

இதுகுறித்து ஹெச்.ராஜா அமைச்சர் வைத்திலிங்கத்திடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது: காரைக்குடியில் உள்ள சூடாமணிபுரம் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்துக்கு சொந்தமான 4200 சதுர அடியிலான கடைக்கான மனை கமலா என்ற 85 வயது மூதாட்டிக்கு கிரயம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மனையை திமுக-வைச் சேர்ந்த காரைக்குடி முன்னாள் நகர்மன்றத் தலைவர் முத்துதுரை தனது பினாமியான அன்புத்திலகம் என்பவர் பெயரில் ஆக்கிரமித்து வைத்துள்ளார்.

2005-ல் நான் எம்.எல்.ஏ-வாக இருந்தபோது இந்த முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் கேட்டுக் கொண்டேன். அவரும் கடும் நடவடிக்கை எடுக்கும்படி அரசுச் செயலருக்கு உத்தரவிட்டார். அதன்படி, ஆக்கிரமிப்பை அகற்ற விருதுநகர் துணைப் பதிவாளருக்கு கூட்டுறவு வீட்டுவசதித் துறை பதிவாளர் அப்போது உத்தரவிட்டார். ஆனால், விருதுநகர் துணைப் பதிவாளர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து, கமலா மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்து கடந்த ஜனவரி 30-ல் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், ‘4 வார காலத்துக்குள் ஆக்கிரமிப்பை அகற்றி மனையை கமலா வசம் ஒப்படைக்க வேண்டும் என விருதுநகர் கூட்டுறவு வீடு கட்டும் சங்க துணைப் பதி வாளர், சிவகங்கை எஸ்.பி., ஆட்சியர் ஆகியோருக்கு உத்தர விட்டது. ஆனாலும், இன்னும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வில்லை. எனவே அமைச்சர் இந்த விஷயத்தில் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி மனையை மூதாட்டி கமலாவிடம் ஒப்படைக்க துணைப் பதிவா ளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு ஹெச்.ராஜா தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x