

வேளாண் பொறியியல் துறை அதிகாரி முத்துக்குமாரசாமியின் தற்கொலை தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. காசநோய் அதிகாரி அறிவொளியின் மரணமும் இதேபோன்ற சம்பவம்தான் என்கின்றனர் அத்துறைக்கு நெருக்கமானவர்கள்.
திருநெல்வேலி மாவட்ட வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி மரணம் குறித்த வழக்கு, சிபிசிஐடி விசாரணையில் இருந்து வருகிறது. இச்சம்பவத்தில் வேளாண் துறை அமைச்சராக இருந்த அக்ரி.கிருஷ்ண மூர்த்தி பெயரும் தொடர்புபடுத்தப்பட்டு அவர் பதவி இழந்துள்ளார்.
காசநோய் பிரிவில் புதிதாக உருவாக் கப்பட்ட மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் (ஊதியம் ரூ.20,000), அரசு - தனியார் மருத்துவர்களை இணைக்கும் ஒருங்கி ணைப்பாளர் (ரூ.19,000) உள்ளிட்ட 5 பிரிவுகள் மற்றும் ஏற்கெனவே உள்ள பிரிவுகளுக்கு கூடுதல் பணியிடங்கள் என தமிழகம் முழுவதும் 687 புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
இதுவரை, இதுபோன்ற பணியிடங்களை அந்தந்த மாவட்டத் துணை இயக்குநர் அளவில் கலந்தாய்வு நடத்தி அனுபவம் வாய்ந்த காசநோய் தடுப்புப் பணியாளருக்கே பதவி உயர்வு மூலம் வழங்கி வந்தனர். ஆனால், மாநில காசநோய் அதிகாரியாக இருந்த ஜெ. அறிவொளி, 2013-ல் இந்தத் திட்டத்தை அவுட்சோர்சிங் முறையில் அளித்தார். ஆர்வமுள்ள நிறுவனங்கள் 30.12.2013-க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
காசநோய் தடுப்புத் திட்ட ஊழியர்களின் கடுமையான எதிர்ப்புக்குப் பின்னர் அந்த முடிவு கைவிடப்பட்டது. அந்த 687 பணியிடங்களுக்கும் மாவட்ட வாரியாக நியமனம் செய்ய பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட துணை இயக்குநர் நேர்காணல் நடத்தி, தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த காசநோய் தடுப்புத் திட்ட பணியாளர்கள் 3 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.
அப்போது, அந்த துறை அமைச்சர் தலையிட்டு, அந்தப் பணி நியமனங்களை நிறுத்திவிட்டு, அந்த துணை இயக்குநரை திருவாரூர் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது. தமிழ கத்திலேயே மாவட்ட காசநோய் தடுப்புத் திட்ட துணை இயக்குநர் ஒருவர் பணியிடம் மாற்றப்பட்டது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது.
அனைத்து அறிவிப்புகளும், பணி நியமனங்களும் நிறுத்தப்பட்டு, சென்னை யில் மாநில அளவில் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என 24.12.2014 அன்று அறிவிப்பு வெளியிடப் பட்டது.
ரூ.20 கோடி இலக்கு
இப்புதிய பணியிடங்களை வெளியாட் களுக்கு அளித்தால், தலா ஒன்றரை வருட ஊதியத்தை (ரூ.3.60 லட்சம்) பெறலாம் என்பது துறையின் முக்கிய நபரின் திட்டமாக இருந்துள்ளது. இதன்படி, தலா ரூ.3 லட்சம் வீதம் 687 பணியிடங்களுக்கு ரூ.20 கோடி அள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
தகுதி, இடஒதுக்கீடு
அப்போது ஜெ. அறிவொளி, முதலில் முன்னுரிமை அடிப்படையில் களப்பணி யாளர்களுக்கு ஒரு பொது கலந்தாய்வு நடத்தி விருப்பமும், தகுதியும் உள்ளவர் களுக்கு பணியிடங்களை நியமிக்கலாம். மீதி இடங்களில் மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல இடஒதுக்கீடு அடிப்படையில் புதியவர்களை நியமிக்கலாம் என்று பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது.
அறிவொளியின் மரணம்!
இந்நிலையில்தான், ஜெ.அறிவொளி கடந்த மாதம் 17-ம் தேதி, சென்னை மெரினா கடற்கரையில் மர்மமான முறை யில் இறந்து கிடந்தார். புற்றுநோய் மற்றும் பணிச்சுமையின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. ஆனால், மேலிடத்தில் இருந்து வந்த மிரட்டலே அவரது மரணத் துக்கு காரணம் என்று அத்துறைக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இந்தப் பணியிடங்களுக்காக சென்னையில் பிப்ரவரி 28, மார்ச் 1-ம் தேதிகளில் எழுத்து தேர்வு நடத்தப் பட்டது.
இத்தேர்வை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் மத்திய சுகாதாரத் துறை செயலர், தமிழக சுகாதாரத் துறை செயலர், மாநிலத் திட்ட இயக்குநர், மாநில காசநோய் அலுவலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வசூல் ராஜாக்கள்
தேர்வு முடிந்த மறுநாளில் இருந்தே, தேர்வு எழுதியவர்களின் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு ஒரு பிரிவினர் வீடு வீடாகச் சென்று, "உங்களது ஹால் டிக்கெட் ஜெராக்ஸ் கொடுங்கள், மேலிடத்துக்கு அளிக்க வேண்டிய ஒன்றரை வருட சம்பளத்தில், முதலில் 5 மாத சம்பளத்தை கொடுத்து உங்கள் பணியிடத்தை உறுதி செய்து கொள்ளுங்கள், வழக்கைப் பற்றி கவலைப்பட வேண்டாம்" என்று கூறி வசூல் வேட்டை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.