

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு குறித்து உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் உ.சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். மதுரையில் 8-ம் கட்ட விசாரணையை கடந்த பிப்.27-ம் தேதி தொடங்கிய அவர் பல்வேறு துறை அதிகாரிகளை அழைத்து விசாரணை மேற்கொண்டார். கிரானைட் ஏற்றுமதி, வரிவிதிப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுத் துறைகள் வழங்கிய பல்வேறு விவரங்களை ஆய்வு செய்தார். நிலப் பரிமாற்றம் தொடர்பாக பதிவுத் துறை அதிகாரிகள், வரு வாய்த் துறையினரிடம் விசா ரணை மேற்கொண்டார். தற்போது, நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற் கான இடைக்கால அறிக்கை தயாரிப்பில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.
கிரானைட் அதிபர்கள் வாங்கிய நிலங்கள் குறித்த விவரங்களை மேலூர் தாலுகாவைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் தாக்கல் செய்தனர். கனிமவளத் துறை உதவி இயக்குநர் ஆறுமுக நயினாரிடம் சகாயம் விசாரணை மேற்கொண்டார். குவாரிகள் வாரி யாக நடைபெற்ற முறைகேடுகள் குறித்தும், டாமின் நிறுவனத்தில் நிகழ்ந்த முறைகேடு குறித்து தனி யாக விவரங்களை அளிக்கும் படியும் சகாயம் உத்தரவிட்டார். நேற்றுடன் 8-ம் கட்ட விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்த பின்னர், நீதிமன்ற உத்தரவுக்கேற்ப அடுத்தகட்ட விசாரணையை தொடர சகாயம் திட்டமிட்டுள்ளார்.
குழுவில் மேலும் ஒரு அதிகாரி
மதுரை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஜெய்சிங் ஞானதுரையை தனது குழுவில் நியமிக்கும்படி சகாயம் வேண்டுகோள் விடுத்திருந்தார். பல மாதங்களாகியும் இதற்கான அரசாணை வெளியிடப்படாமல் இருந்தது. ஆனாலும் ஜெய்சிங் ஞானதுரைக்கு சகாயம் சம்மன் அனுப்பி விசாரணைக்குப் பயன்படுத்திக்கொண்டார். தற்போது சகாயம் விசாரணை குழுவில் பணியாற்ற ஜெய்சிங் ஞானதுரையை அனுமதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.