

சென்னையில் எஸ்.எம்.எஸ். மூலம் ஆட்டோ சேவையை பெறும் திட்டம் வியாழக்கிழமை (ஏப்ரல் 10) முதல் செயல்படத் தொடங்குகிறது.
பொது மக்களுக்கு ஆட்டோ தேவைப்படும்போது ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும். அவர்களின் வீட்டிற்கே ஆட்டோ வந்து ஏற்றிச் செல்லும். இந்த புதிய வசதி வியாழக்கிழமை முதல் அமல்படுத்தப்படுகிறது.
இது குறித்து எஸ்.எம்.எஸ். ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாகி நவநீதன் கூறுகையில், “இப்புதிய ஆட்டோ சேவையைப் பெற விரும்புபவர்கள், தங்களது பகுதியின் பின்கோடு எண் மற்றும் தாங்கள் செல்லவுள்ள இடத்தின் பெயரை 9944733111 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும். அடுத்த 20 நொடிகளில், உங்களுக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களின் தொலைபேசி எண்கள் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும். பயணிகள் தாங்களாகவே ஓட்டுநரைத் தொடர்பு கொள்ளலாம். ஆட்டோவில் ஏறி செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றடைந்த பிறகு மீட்டர் தொகையுடன் கூடுதலாக ரூ.10 மட்டும் செலுத்தினால் போதும். இந்த வசதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கிடைக்கும். இந்த திட்டம் குறித்து முழு தகவல்களை 4555 4666 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு பெறலாம். தற்போது இத்திட்டத்தில் 1000 ஆட்டோக்கள் இணைந்துள்ளன. இது மேலும் விரிவுபடுத்தப்படும்’’ என்றார்.