Published : 24 Mar 2015 08:51 AM
Last Updated : 24 Mar 2015 08:51 AM

உடல்நலக் குறைவால் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள் தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு

மூளைச்சாவு அடைந்த சென்னை இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தால் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் சரவணன் (22). ஏ.சி. மெக்கானிக். உடல்நலக் குறைவு காரணமாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த வாரம் சேர்க்கப்பட்டார்.

அவரது மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் ரத்த கசிவு இருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் மூளைச்சாவு அடைந் தார்.

பெற்றோர் அனுமதி

இதையறிந்து அவரது பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் மனதை தேற்றிக்கொண்ட அவர்கள், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக மருத்துவர்களிடம் தெரிவித்தனர். அதன்படி அறுவை சிகிச்சை செய்து சரவணனின் உடலில் இருந்து உறுப்புகள் அகற்றப்பட்டன. தானமாக பெறப்பட்ட கல்லீரலை, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 47 வயது நோயாளிக்கு டாக்டர் மனோகரன் தலைமையிலான குழுவினர் வெற்றிகரமாக பொருத்தினர். ஒரு சிறுநீரகம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நோயாளிக்கும் பொருத்தப்பட்டது.

இதயம், நுரையீரல் ஆகியவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன.

தேவையான 2 நபர்களுக்கு பொருத்துவதற்காக 2 கண் களும் எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு கொடுக்கப்பட்டன. மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானத்தால் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இதுவரை 677 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில், மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து 90 சிறுநீரகங்கள் பெறப்பட்டு உள்ளன.

இதேபோல 47 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x