Published : 02 Mar 2015 11:00 AM
Last Updated : 02 Mar 2015 11:00 AM

தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்: பிறந்த நாள் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழக மக்கள் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று திமுக பொருளா ளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின், தனது 63-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். ஸ்டாலினின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் இளைஞர் எழுச்சி நாளாக திமுகவினர் கொண்டாடினர். பிறந்தநாளை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு கோபாலபுரம் இல்லத்துக்கு வந்த மு.க.ஸ்டாலின், அங்கு திமுக தலைவரும் தனது தந்தையுமான கருணாநிதி மற்றும் தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்துகளைப் பெற்றார். அப்போது ஸ்டாலினை முத்தமிட்டு கருணாநிதி வாழ்த்து தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பெரியார் நினைவிடம் மற்றும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஸ்டாலின், காலை 8.30 மணியளவில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்துக்கு வந்தார். அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள், வரிசையில் நின்று ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆளுயர மாலைகள், வேட்டிகள், பொன்னாடைகள், பழங்கள், போன்றவற்றை ஸ்டாலினுக்கு வழங்கினர்.

விழுப்புரம் மாவட்ட திமுக சார்பில் வெள்ளி வாளும், தஞ்சை மாவட்ட திமுக சார்பில் பெண்களின் சீர்வரிசை மரியாதையும் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டன. ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ரத்த தான முகாமுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் துர்கா ஸ்டாலின் உட்பட ஏராளமானவர்கள் ரத்த தானம் செய்தனர்.

பிறந்தநாள் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

மார்ச் 1-ம் தேதியை பாகுபாடு ஒழிப்பு தினமாக ஐ.நா சபை கொண்டாடுகிறது. எனவே, பாகுபாடுகளை ஒழிக்க நாம் சபதம் ஏற்க வேண்டும். பாகுபாடு காட்டாத ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும். எல்லோர் உடலிலும் ஒரே மாதிரியான ரத்தம்தான் ஓடுகிறது. கடவுள் நம்பிக்கையுடையவர்களின் ரத்தம் கடவுள் நம்பிக்கையற்றவர்களை வாழ வைக்கிறது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் ரத்தம் கடவுள் நம்பிக்கை உடையவர்களை வாழ வைக்கும். எனவேதான் இந்த மாதம் முழுவதும் ரத்த தானம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்.

ஒரு பயிர் வாழ அதற்கு பருவமாற்றங்கள் தேவைப்படுவது போல் நம்முடைய வளர்ச்சிக்கும் பல மாற்றங்கள் தேவைப்படுகிறது. தமிழக மக்கள் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். எனவே, ஊர் ஊராக, தெருத்தெருவாக, பகுதி பகுதியாக செல்வோம். கடமைகள் என்றும் நிற்பதில்லை என்ற உணர்வோடு சபதம் ஏற்போம்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பிறந்த நாளையொட்டி நடிகர் ரஜினிகாந்த், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், திமுக முன்னாள் மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x