Published : 04 Mar 2015 10:07 AM
Last Updated : 04 Mar 2015 10:07 AM

கால் டாக்ஸி நிறுவனம் மூலம் ரூ.64 லட்சம் மோசடி: பெண் தொழிலதிபர் கைது - தொலைக்காட்சி நடனக் கலைஞரும் சிக்கினார்

முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி பலரிடம் ரூ.64 லட்சம் மோசடி செய்த கால் டாக்ஸி பெண் உரிமையாளரும் அவரிடம் உதவியாளராக வேலை பார்த்த தொலைக்காட்சி நடனக் கலைஞரும் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கோயம்பேடு பிருந்தாவன் நகர் முல்லை தெருவில் ‘இந்தியா டிராக் கால் டாக்ஸி’ என்ற டிராவல்ஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் மீது சூளைமேடு வீரபாண்டி நகரை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருந்ததாவது:

இந்தியா டிராக் கால் டாக்ஸி நிறுவனத்தில் இருந்து என் செல்போனுக்கு ஒரு தகவல் வந்தது.

‘ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.5 ஆயிரம் வீதம் 36 மாதங்களுக்கு வழங்கப்படும்’ என்று கூறப்பட்டு இருந்தது. மனைவி அமுதா, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் என் பெயரில் மொத்தம் ரூ.34 லட்சம் முதலீடு செய்தேன். ஆனால் சொன்னபடி பணம் தரவில்லை. எனவே, கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டேன். பணம் இல்லாத காசோலைகளைக் கொடுத்து ஏமாற்றிவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு புகாரில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல, மேலும் 6 பேர் தங்களிடம் கால் டாக்ஸி நிறுவனம் ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக புகார் கூறினர். இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். ரூ.64 லட்சம் அளவுக்கு மோசடி நடந்திருப்பது உண்மை என தெரியவந்தது.

இதையடுத்து, இந்தியா டிராக் கால் டாக்ஸி உரிமையாளர் நர்மதா (34), அவரது உதவியாளர் பரத்குமார் (24) ஆகியோரை போலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸார் மேலும் கூறியதாவது:

வேலூர் மாவட்டம் முக்கூரை சேர்ந்தவர் நர்மதா. பிஎஸ்சி பட்டதாரி. இவரது தந்தை அறநிலையத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நர்மதாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. 2005 முதல் 2009 வரை சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் மேலாளராக வேலை பார்த்துள்ளார்.

2010-ல் 170 கார்களுடன் கால் டாக்ஸி நிறுவனம் தொடங் கினார். ஐ.டி நிறுவனங்களுக்கும் கார்களை இயக்கினார். முகலி வாக்கம் ஏ.ஜி.எஸ். காலனியில் வசிக்கிறார்.

அவரிடம் உதவியாளராக வேலை பார்த்த பரத்குமார், பிரபல தனியார் தொலைக் காட்சியில் நடனப் போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற்றவர். தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியில் நடனம் ஆடி வருகிறார்.

இவர்களிடம் ஏராளமானோர் பணம் செலுத்தியுள்ளனர். கோடிக்கணக்கில் மோசடி நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்த மோசடியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது.

இவ்வாறு போலீஸார் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x