Published : 05 Mar 2015 09:06 AM
Last Updated : 05 Mar 2015 09:06 AM

வாழப்பாடி அருகே விபத்து: ஆட்டோ-பஸ் மோதி 5 பேர் பலி - ஆத்திரமடைந்த மக்கள் பஸ் மீது கல்வீச்சு

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஷேர் ஆட்டோ மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாழப்பாடி அருகே உள்ள நீர்முள்ளிக்குட்டை பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவரது மகன் வெங்கடேசன் (25). ஷேர் ஆட்டோ டிரைவர். இவர் நேற்று தனது ஆட்டோவில் 7 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேளூரில் இருந்து நீர்முள்ளிக்குட்டை நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

சந்திரபிள்ளை வலசுதரை பாலத்தில் ஷேர் ஆட்டோ சென்றபோது, சேலத்தில் இருந்து பேளூர் நோக்கி வந்த தனியார் பஸ் ஷேர் ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது. பஸ் மோதிய விபத்தில், ஷேர் ஆட்டோ கவிழ்ந்து நொறுங்கியது. பஸ்ஸுக்கு அடியில் ஆட்டோ சிக்கிக்கொண்டது. ஷேர் ஆட்டோ டிரைவர் வெங்கடேசன், ராசிபுரத்தைச் சேர்ந்த சத்துணவு அமைப்பாளர் காளியம்மாள், அத்தனூர்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன், மன்னார் பாளையத்தைச் சேர்ந்த புதுமணப்பெண் ஜெயந்தி ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.

மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். விபத்து பற்றி தெரியவந்ததும் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். வாழப்பாடி போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர்.

பலத்த காயங்களுடன் புது மாப்பிள்ளை முருகேசன், சதீஸ், ஜெயக்குமார் ஆகியோர் அலறி துடித்தனர். இவர்களை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு மக்கள் அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வாழப்பாடி டிஎஸ்பி சண்முகசுந்தரம் தலைமையிலான போலீஸார் விரைந்து வந்தனர். விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விபத்தில் 5 பேர் பலியானதை அடுத்து ஆத்திரம் அடைந்த மக்கள், தனியார் பஸ் மீது கல் வீசி தாக்கினர். இதில் பஸ் கண்ணாடி அடித்து உடைக்கப்பட்டது. அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியதை அடுத்து, சம்பவ இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. விபத்து சம்பவத்தால், சேலம் - பேளூர் மெயின் ரோட்டில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x