Published : 14 Mar 2015 09:59 AM
Last Updated : 14 Mar 2015 09:59 AM

விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட கொத்தவாசல்சாவடி தொழிலாளியை நண்பரே அடித்துக் கொன்றது அம்பலம்: சிசிடிவி உதவியால் சிக்கினார்

கொத்தவால்சாவடியில் விபத்தில் இறந்ததாகக் கருதப்பட்ட கூலித் தொழிலாளி, நண்பரால் தாக்கப்பட்டுதான் இறந்துள்ளார் என கண்காணிப்பு கேமரா உதவியுடன் தெரியவந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வரதன் (54). சென்னை பிராட்வேயில் தங்கி கொத்தவால்சாவடியில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்தார். கடந்த 9 ம் தேதி இரவு கொத்தவால்சாவடி வரதமுத்தையா தெருவில் உள்ள பிளாட்பாரத்தில் ரத்த வெள்ளத்தில் அவர் உயிருக்கு போராடியபடி கிடந்தார். அவர் விபத்தில் காயமடைந்திருக்கலாம் என்று முதலில் கூறப்பட்டது. அவரை போலீஸார் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதற்கிடையே, வரதன் ரத்த வெள்ளத்தில் கிடந்த பகுதியை போலீஸார் சோதனையிட்டனர். அங்குள்ள கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். மர்ம நபர் ஒருவர் வரதனை அடித்து இழுத்துச் செல்லும் காட்சி அதில் பதிவாகியிருந்தது. இதுதொடர் பாக துறைமுகம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, வரதனின் நண்பர் ராஜமாணிக்கத்தை கைது செய்தனர்.

இதுபற்றி போலீஸார் மேலும் கூறும்போது, ‘‘வரதனுடன் வேலை பார்க்கும் ராஜமாணிக்கம். இவரும் அரியலூரை சேர்ந்தவர். இருவரும் நண்பர்கள். ராஜமாணிக்கம் குடிப்பழக்கம் உள்ளவர். கடந்த 9 ம் தேதி இரவு போதையில் இருந்த அவர் மேலும் மது குடிக்க வரதனிடம் பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்ததால் கட்டையால் அடித்துள்ளார். பின்னர், அவரை பிளாட்பாரத்தில் இழுத்துப் போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் கண்டு அவரை கைது செய்துள்ளோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x