

பெண்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, தாங்கள் பணிபுரியும் துறையில் சாதிக்க வேண்டும் என்று மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஸ்வரண் சிங் ஐஏஎஸ் வலியுறுத்தினார்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் மற்றும் ‘தி இந்து - பெண் இன்று’ இணைப்பிதழ் சார்பில் பெண்களுக்கு நாப்கின் மற்றும் மணப்பெண் அலங்காரம் குறித்த இலவச பயிற்சி முகாம், சென்னை கிண்டியில் நேற்று நடந்தது. முகாமை தொடங்கி வைத்து ஸ்வரண் சிங் ஐஏஎஸ் பேசியதாவது:
பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும். என் மனைவி ஒரு வங்கியில் பணிபுரிந்து வந்தார். பின்னர் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டார். நான் தமிழகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதும், என் மனைவி நன்றாக தமிழ் கற்றுக்கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதினார். அதில் வெற்றியும் பெற்றார். ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி என கூறிக்கொள்ளாமல் தனது சொந்த முயற்சியால் அரசு பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். சுமார் 20 ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரிந்தார். அவருடைய சேவையைப் பாராட்டி மத்திய அரசு சிறந்த ஆசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கியது.
இதுபோல திறமையுள்ள பெண் கள் தாங்கள் பணிபுரியும் துறை எதுவாக இருந்தாலும், அதில் சாதிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும். மகாகவி பாரதியார் கூறியதுபோல பெண்கள் அச்சமில்லாமல் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்க தலைவர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் பேசும்போது, ‘‘பெண்கள் பலருக்கு திறமை இருந்தும் அவற்றை வெளிப்படுத்தாமல் உள்ளனர். நாட்டில் 80 சதவீத பெண்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். பெண்களின் திறமைகளை வெளிகொண்டு வருவதற்காக பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது’’ என்றார்.
இலவச பயிற்சி முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு வீடுகளிலேயே சுயதொழில் மூலம் நாப்கின் தயாரிப்பது மற்றும் மணப்பெண் அலங்காரம் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.