

கடலூரிலிருந்து சேலத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள போலி மதுபானம் கடத்திய அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் இருந்து சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள வாக்காளர்களுக்கு மதுபானம் கொண்டு வருவதாக மதுவிலக்கு மத்திய புலனாய்வு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடி மையங்களிலும் போலீஸார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் முத்தம்பட்டியில் ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீஸார் வாகனத் தணிக்கை செய்தனர். அந்த வழியே வந்த சரக்கு வாகனத்தை போலீஸார் மடக்கி சோதனையிட்டனர். அதில், 1824 மதுபான பாட்டில்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த மது பாட்டில்கள் போலியாக தயாரிக்கப்பட்ட மதுபானங்கள் என்று தெரியவந்தது. மதுபான பாட்டிலுக்கு பாதுகாப்பாக வந்த காரையும் கைப்பற்றினர்.
சரக்கு வாகனத்தில் வந்த கடலூர் மாவட்டம் வேம்பூரைச் சேர்ந்த எம்.ஜி.ஆர் மன்ற ஒன்றிய துணைச் செயலாளர் காமராஜ் (61), அவரது மகன் குணசேகரன் (30), விஜய் (17) மற்றும் அவர்களது நண்பர்கள் வெங்கடேஷ் (26), பிரபு (31) ஆகிய ஐந்து பேரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் எஸ்.கொல்லப்பட்டியைச் சேர்ந்த சேகர் (40) மற்றும் இடும்பன் என்பவருக்கு போலி மதுபானங்களைக் கொண்டு செல்வதாகவும், வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கடலூரில் இருந்து மதுபாட்டிலை ஏற்றி வந்ததாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து எஸ்.கொல்லப் பட்டியில் உள்ள சேகர், இடும்பன் ஆகியோர் வீடுகளில் போலீஸார் நடத்திய சோதனையில் 351 போலி மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள போலி மதுபான பாட்டிலை போலீஸார் பறிமுதல் செய்தனர். சேகர், இடும்பன், அதிமுக பிரமுகர் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.