30 லட்சம் காச நோயாளிகளை கண்டுபிடித்து குணப்படுத்த இலக்கு

30 லட்சம் காச நோயாளிகளை கண்டுபிடித்து குணப்படுத்த இலக்கு
Updated on
2 min read

மார்ச் 24 - இன்று உலக காசநோய் தினம்

உலகம் முழுவதும் 30 லட்சம் காச நோயாளிகள் சிகிச்சைக்கு வராமல் உள்ளனர். அவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளித்து, குணப்படுத்துவதே இந்த ஆண்டுக்கான உலக காசநோய் தினத்தின் இலக்காக நிர்ண யிக்கப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி.க்கு அடுத்து, மருத்துவ உலகில் பயங்கரமான உயிர்க் கொல்லி தொற்று நோயாகக் கருதப்படுவது காசநோய். இந்த நோய்க்கு நல்லவர், கெட்டவர், ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமில்லை. யாருக்கு வேண்டுமென்றாலும், எந்த நேரத்திலும் வரலாம். தற்போது இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள் தொகையில், 230 பேர் காச நோயாளிகளாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆண்டுக்கு சராசரியாக 6,300 குழந்தைகளுக்கு காசநோய் பரவி வருகிறது.

திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக காசநோயாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு மறு வாழ்வு அளிக்கும் திண்டுக்கல் ‘மீரா பவுண்டேஷன்’ நிறுவன இயக்குநர் ராஜா முகமது ‘தி இந்து’விடம் கூறியதாவது:

1990-ம் ஆண்டு 1 லட்சம் பேரில் 500 பேர் காசநோயாளிகளாக இருந்தனர். 2012-ம் ஆண்டு கணக்கெடுப்பில் இது பாதியாக குறைந்தது தெரியவந்தது.

தற்போது லட்சம் பேருக்கு 230 பேர் நோயாளிகளாக உள்ளனர். இந்தியாவில் ஆண்டுக்கு 14 லட்சம் முதல் 15 லட்சம் நோயாளிகள் கண்டுபிடிக்கப்படுகின்றனர்.

இவர்களில் 85 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சைக்கு வருகின்றனர். மீதி பேர் சிகிச்சைக்கு வராமல் மற்றவர்களுக்கு நோயை பரப்புகின்றனர். உலக அளவில் கணக்கிட்டால், 30 லட்சம் காசநோயாளிகள் காணாமல் போய் உள்ளனர். அவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது, எல்லோரையும் குணப்படுத்துவதே இந்த ஆண்டுக்கான உலக காசநோய் தினத்துக்கான இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை, புதியவர்களுக்கு மட்டுமே இந்த நோய் அதிக அளவு வந்தது. தற்போது, ஏற்கெனவே காசநோய் வந்தவர்களில் 30 சதவீதம் பேருக்கு மீண்டும் காசநோய் பாதிப்பு ஏற்படு வதாக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைப் பேராசிரியர் மருத்துவர் மதன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

காசநோய் கட்டுக்குள் இருக்கிறது எனச் சொல்ல முடியாது. ஒருமுறை காசநோய் வந்தவர்களுக்கு மீண்டும் காசநோய் வந்தால் அவர்களை ‘மல்டிடிரக் ரெசிஸ்டன்ஸ் (எம்.டி.ஆர்.டிபி) நோயாளிகள் என்பர்.

தொடக்க நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெற்றால் 6 மாதத்தில் இந்த நோயை குணப்படுத்த முடியும். சிலர் 6 மாதம் சிகிச்சையை முழுமையாக எடுத்துக் கொள்ளாமல் இடையி லேயே விட்டுவிடுகின்றனர். அதனால், தற்போது ‘மல்டிடிரக் ரெசிஸ்டன்ட்’ நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இவர்கள் மீண்டும் 2 ஆண்டுகள் நீண்ட சிகிச்சை பெற வேண்டும். இந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாவிட்டால், இவர்களை காப்பாற்ற இயலாது. இதற்காகவே, தற்போது அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில், ‘மல்டிடிரக் ரெசிஸ்டன்ட்’ நோயாளிகளுக்காக தனி வார்டுகள் அமைக்கப் பட்டுள்ளன.

சர்க்கரை நோய் கட்டுக்குள் இல்லாதவர்களுக்கும் காசநோய் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

பொதுவாக அடிக்கடி பயணம், வெளியிடங்களில் சுற்றும் 18 முதல் 30 வயதுடையவர்களுக்கும், சரியான சத்துணவு எடுத்துக்கொள்ளாத கூலித் தொழிலாளர்களுக்கும் இந்த நோய் அதிக அளவு பாதிக்கிறது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in