

இந்த ஆண்டு இறுதிக்குள் சூரியசக்தி மூலம் 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் எ.வ.வேலு, “சூரிய மின்சக்தி மூலம் ஆண்டுக்கு 48 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வோம் என்று சொல்லப்பட்டதே, இதுவரை ஒரு மெகாவாட் கூட மின்சாரம் உற்பத்தி செய்யப்படவில்லை” என்று குற்றம்சாட்டினார்.
அதற்கு பதில் அளித்து மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் பேசியதாவது:
அரசின் சூரிய மின்சக்தி கொள்கையின்படி உயர் அழுத்த மின்சாரத்தைப் பயன்படுத்துவோர் முதல் ஆண்டில் 3 சதவீதமும் 2-ம் ஆண்டில் 3 சதவீதமும் சூரிய சக்தி மின்சாரத்தை உபயோகப்படுத்த வேண்டும். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் சூரியசக்தி மின்சார கொள்கையை அரசால் நடைமுறைப்படுத்த முடியவில்லை.
இருப்பினும் அதற்கு மாற்று ஏற்பாடாக ஒரு யூனிட் 7 ரூபாய் என்ற விலையில் சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து மின்சார வாரியத்திடம் வழங்கலாம். தனியார் மூலம் 1,000 மெகாவாட் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் விரைவில் ஒப்பந்தம் போடப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் 1,000 மெகாவாட் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
இவ்வாறு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.