Published : 30 Mar 2015 10:35 AM
Last Updated : 30 Mar 2015 10:35 AM

‘விஷன்-2023’ இலக்குகளை எட்ட நடவடிக்கைகள் என்ன? - வெள்ளை அறிக்கை வெளியிட அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

‘விஷன் 2023’ இலக்குகளை எட்டுவதற்காக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றப் போவதாக கடந்த 2001-ம் ஆண்டில் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியை ஏற்றது முதல் ஜெயலலிதா கூறி வந்தாலும், அதற்கான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை. 2011-ம் ஆண்டில் மூன்றாவது முறையாக பதவி ஏற்ற பின் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துப் போவதாகக் கூறி, தொலைநோக்குத் திட்டம் - 2023 (விஷன் - 2023) என்ற ஆவணத்தை 2012-ம் ஆண்டு மார்ச் 22-ம் தேதி ஜெயலலிதா வெளியிட்டார்.

தொலைநோக்குத் திட்டம் - 2023 வெளியிடப்பட்ட பிறகு, இரு ஆண்டுகள் கழித்து 2014-ம் ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி அதன் இரண்டாம் பாகத்தை வெளியிட்டதைத் தவிர, அதன் இலக்குகளை எட்டுவதற்காக தமிழக அரசு இன்று வரை ஆக்கபூர்வமான நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை. தொலைநோக்கு திட்டத்தின் முதல் இலக்கு 2023-ம் ஆண்டில் தமிழகத்தின் தனிநபர் வருமா னத்தை ரூ.6.20 லட்சமாக உயர்த்து வது ஆகும். திட்டம் அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், நடப்பாண்டில் தனிநபர் வருமானம் ரூ. 2 லட்சமாக உயர்ந்திருக்க வேண்டும்.

ஆனால், தமிழகத்தின் தனிநபர் வருமானம் இப்போதுதான் ஒரு லட்சம் ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தொலைநோக்குத் திட்டம் தொலைதூரத்தில் இருக்கிறதே தவிர, மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இல்லை. இந்த உண்மையை ஒட்டுமொத்த தமிழகமும் உணர்ந்திருக்கிறது. இத்திட்ட இலக்குகளை எட்டுவதில் முன்னேற்றம் காணப்படவில்லை. ஆனால், கடன் மட்டும் அப்போதிருந்த ரூ.1 லட்சம் கோடியில் இருந்து ரூ.4.12 லட்சம் கோடியாக அதிகரித்துவிட்டது.

அதிமுக ஆட்சியில் தமிழகம் வளர்ச்சியடைவதாக வாய்ப்பந்தல் போடும் ஆட்சியாளர்கள், தொலைநோக்குத் திட்டம் - 2023 இலக்குகளை எட்டுவதற்காக இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? இதுவரை எவ்வளவு முதலீடு செய்யப்பட்டிருக்கிறது? என்பன உள்ளிட்ட விவரங்களை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்திலேயே வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x