Published : 29 Mar 2015 12:02 PM
Last Updated : 29 Mar 2015 12:02 PM

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக சென்னையில் பெரும்பாலான கடைகள் அடைப்பு: ரயில் மறியலில் ஈடுபட்ட 300 பேர் கைதாகி விடுதலை

காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடகத்தைக் கண் டித்து, விவசாயிகள் விடுத்த முழு அடைப்புப் போராட்ட அழைப்பை ஏற்று சென்னையில் நேற்று பரவலாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

விவசாயிகளின் அழைப்பை ஏற்று சென்னையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. முக்கிய பகுதிகளான தி.நகர், மயிலாப்பூர், பாரிமுனை, வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சூளைமேடு, அரும்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை போன்ற இடங்களில் மளிகைக் கடைகள், காய்கறி மார்க்கெட், ஓட்டல்கள் பரவலாக நேற்று மூடப் பட்டிருந்தன. தி.நகரில் பெரும் பாலான கடைகள் அடைக்கப்பட் டிருந்ததால், வழக்கத்துக்கு மாறாக நேற்று அந்தப் பகுதிகள் வெறிச்சோடியிருந்தன.

போக்குவரத்து பாதிப்பில்லை

அதேவேளையில், மருந்துக் கடைகள், பால், செய்தித்தாள் விற்பனை கடைகள், சிறு சிறு பெட்டிக் கடைகள் திறந்திருந்தன. பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம்போல ஓடின.

புறநகரிலும் ஆதரவு

சைதாப்பேட்டை, கிண்டி, பரங்கி மலை, மேடவாக்கம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர், பல்லா வரம், குரோம்பேட்டை, அம்பத்தூர், பட்டரவாக்கம், பெரம்பூர், வில்லி வாக்கம், உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் பெருமளவு கடை கள் மூடப்பட்டிருந்தன. சில இடங்களில் இறைச்சிக் கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

சென்னையின் வடக்குப் பகுதி களான பெரம்பூர், கொடுங்கையூர், தண்டையார் பேட்டை, கொளத்தூர், பட்டாளம், வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் காலை முதலே பரவலாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

ஆனால், கோயம்பேட்டில் உள்ள காய்கறி மற்றும் பூ மார்க்கெட் நேற்று திறந்திருந்தன. மால்களும், சினிமா தியேட்டர்களும் வழக்கம்போல இயங்கின. சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் திறந்து வைக்கப்பட் டிருந்த டீ கடையை சிலர் உடைத்து மூட வைத்தனர். பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந் தாலும், சில கடைகள் திறந்திருந்த காரணத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையவில்லை.

ரயில் மறியல்

அனைத்து விவசாய சங்கங் களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் சென்னை எழும்பூரில் நேற்று காலை ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. திமுக, காங்கிரஸ், மதிமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இதில் பங்கேற்றன. திமுக துணைப் பொதுச் செயலர் வி.பி. துரைசாமி, திமுக சென்னை கிழக்கு மாவட்டச் செயலர் பி.கே. சேகர்பாபு, மதிமுக துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா, மமக எம்எல்ஏ ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்திருந்தனர். ஜோத்பூர்- மன்னார்குடி ரயில் மறிக்கப்பட்டதால் அந்த ரயில் 45 நிமிடங்கள் தாமதமாகச் சென்றது. போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 300 பேரை கைது செய்த போலீஸார், மாலையில் விடுவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x