

வழிப்பறி செய்யப்பட்ட நகைக்குப் பதிலாக போலீஸார் பணம் கொடுத்த தாக எஸ்.பி.யிடம் மூதாட்டி புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள சுருமான்பட்டியைச் சேர்ந்தவர் தனபாக்கியம்(75). கடந்த 27-ம் தேதி மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரைத் தாக்கி, 3 பவுன் நகையைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்து பாலவிடுதி போலீஸில் புகார் செய்துள்ளார்.
பின்னர், வழிப்பறியில் ஈடு பட்டவர்களைப் பிடித்ததாக போலீஸார் கூறியுள்ளனர். பால விடுதி காவல் நிலையம் சென்ற தனபாக்கியம், வழிப்பறியில் ஈடுபட்டவர்களை அடையாளம் காட்டியுள்ளார்.
அப்போது, போலீஸாரும், வழிப்பறி செய்தவர்களின் உறவினர் களும் சேர்ந்து, “நகையைத் திருப்பித் தரமுடியாது. அதற்குப் பதிலாக பணம் தருகிறோம்” என்று கூறி, தனபாக்கியத்திடம் ரூ.65 ஆயிரம் கொடுத்துள்ளனர். மேலும், வழிப்பறி குறித்து யாரிடமும் கூறக்கூடாது என கோயிலில் சத்தியம் செய்து கொடுக்குமாறும் வற்புறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், கரூர் காவல் கண்காணிப்பாளர் அலுவல கத்துக்கு நேற்று வந்த தனபாக்கியம், எஸ்.பி. கே.ஜோஷிநிர்மல்குமாரிடம் இதுகுறித்து முறையிட்டதுடன், ரூ.65 ஆயிரம் பணத்தை ஒப்படைக்க முயன்றார். ஆனால், பணத்தைப் பெற மறுத்த காவல் கண்காணிப்பாளர், குளித்தலை டிஎஸ்பி-யிடம் புகார் அளிக்குமாறு தெரிவித்து, தனபாக்கியத்தை அங்கிருந்து அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தால் எஸ்.பி. அலு வலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.