

உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நாளை (16-ம் தேதி) நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக வழக்கறிஞர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதுகுறித்து, தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘உத்தரப் பிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 11-ம் தேதி காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ரோஷன் அகமது என்ற வழக்கறிஞர் உயிரிழந்தார். நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கொடூர செயலைக் கண்டித்து, அகில இந்திய பார் கவுன்சில் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு நடத்த வழக்கறிஞர்களை கோரியுள்ளது. இக்கோரிக்கையை ஏற்று வரும் 16-ம் தேதி ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.பிரபாகரன், பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வி.நளினி ஆகியோரும் 16-ம் தேதி ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.