

விவசாயத்துக்கு இலவச மின்சார இணைப்பு வழங்குவது நிறுத்தப்படவில்லை என்று மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் ஒரு கேள்வியை எழுப்பினார்.
“விவசாய பம்பு செட்டுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதில் பணம் செலுத்தி சுய மின் இணைப்பு திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படுகிறது. ஆனால் இலவச மின்சார இணைப்பு பெறுவதற்காக பதிவு செய்து விட்டு காத்திருப்போருக்கு மின்சார இணைப்பு வழங்கப்படவில்லை” என்று அப்போது அவர் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், “உறுப்பினர் பாலகிருஷ்ணன் கூறுவது முற்றிலும் தவறான தகவல். பணம் செலுத்தி சுய மின் இணைப்பு கேட்டு பதிவு செய்துள்ளவர்களுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல் இலவச மின்சார இணைப்பு கேட்டு பதிவு செய்தவர்களுக்கு அதற்கான பதிவு மூப்பின் அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இரண்டு திட்டங்களும் வெவ்வேறானவை. இரண்டு திட்டங்களின் கீழும் மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு மின் இணைப்பு வழங்குவதை மேலும் துரிதப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.