

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அ.மா.பரமசிவம் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள நெல்லியேந்தல்பட்டி கிராமத்தில் பிறந்தவர் அ.மா.பரமசிவம் (69).
1977-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மேலூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அதன்பின் 1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் சோழ வந்தான் தொகுதியில் போட்டி யிட்டு எம்எல்ஏவாக தேர்வு செய்யப் பட்டார். அவருக்கு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மேலும் மதுரை புறநகர் மாவட்ட அதிமுக செயல ராகவும் இருந்தார்.
மதுரை அண்ணாநகருக்கு குடிபெயர்ந்த அவர், மதுரையில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். நாளடைவில் உடல்நலக் குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினார். அண்மையில் சென் னையிலுள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்றுமுன்தினம் காலமானார். அவரது உடல் மதுரை அண்ணா நகரிலுள்ள வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டிருந்தது. அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா சார்பில் அமைச்சர் செல்லூர் கே.ராஜு உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நெல்லியேந்தல்பட்டிக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
ஜெயலலிதா இரங்கல்
முன்னாள் அமைச்சர் பரமசிவம் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
மதுரை புறநகர் மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அ.மா.பரமசிவம் மரணமடைந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். மாணவர் அணி அமைப்பாளர், தொகுதி அமைப்பாளர், பொதுக் குழு உறுப்பினர், மாவட்டச் செய லாளர், சட்டப்பேரவை உறுப்பினர் என பல நிலைகளில் அவர் மக்கள் பணியாற்றியுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.