

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டுவில் கர்நாடகா அணை கட்டுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரி குறுக்கே மேகதாட்டு, ராசிமணலில் அணை கட்ட தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு மனுவில் கோரிக்கை வைத்துள்ளது.
கர்நாடக அரசு மேகதாட்டு பகுதியில் அணை கட்டும் பணியைத் தொடரக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் நவம்பர் 18ம் தேதி தமிழக அரசு மனு செய்தது. இந்த மனு தற்போது நிலுவையில் உள்ள நிலையில், கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக புதிய மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மேகதாட்டுவில் அணை கட்டுவதற்காக மாநில பட்ஜெட்டில் 25 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள கர்நாடக அரசு, அதற்கான டெண்டர் கோரியும் நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்தது.
இந்த நடவடிக்கை தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக அரசைக் கண்டித்து மார்ச் 28ம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், தமிழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.