Published : 09 Apr 2014 09:30 AM
Last Updated : 09 Apr 2014 09:30 AM

ஈஸ்வரனுக்கு எதிராக ஒன்றிணையும் கொங்கு அமைப்புகள்- அதிமுகவிற்கு ஆதரவு: பெஸ்ட் ராமசாமி அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, பா.ஜ.க வுடன் கூட்டணி என அறிவித்தவர் கொங்குநாடு முன்னேற்றக் கழக நிறுவனர் பெஸ்ட் ராமசாமி.

அதன் பிறகு இதிலிருந்து பிரிந்து சென்ற கொ.ம.தே.க, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்று பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடுகிறது.

இந்நிலையில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியையும், கொ.ம.தே.க வேட்பாளர் ஈஸ்வரனையும் எதிர்த்து பிரச்சாரம் செய்யப் போவதாக கொங்கு அமைப்புகள் அறிவித்துள்ளன.

கொ.ம.தே.க பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தன் மீதான வழக்குகளை மறைத்து, வேட்புமனு தாக்கல் செய்ததாக கொங்கு இளைஞர் பேரவையினர் தேர்தல் அதிகாரிகளிடமும், காவல்துறையிலும் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கொங்குநாடு முன்னேற்றக் கழக நிறுவனர் பெஸ்ட் ராமசாமி தலைமையிலான கூட்டணி அமைப்புகள் அதிமுகவிற்கு முழு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன.

இதுகுறித்து கோவையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர் களிடம் பெஸ்ட் ராமசாமி கூறியது:

2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவாக கொங்குநாடு முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு கொங்கு பேரவை, கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை, தீரன் சின்னமலை பேரவை ஆகியவை இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளோம். கொங்குநாட்டில் 250 ஆண்டுகளுக்கு மேலாக தீரன் சின்னமலையின் வரலாற்றை வெளிக்கொண்டு வர அதிமுகவே துணையாக இருந்து வந்தது. தீரன் சின்னமலை பெயரில் போக்குவரத்து துறை அமைத்தது. திருச்சியிலிருந்து கரூரை பிரித்து, தீரன் சின்னமலை மாவட்டம் என அதிமுக அரசு அறிவித்தது.

கடந்த ஆட்சியில் திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர் உள்ளிட்ட கொங்கு பகுதிகளில் நிறுத்தப்பட்ட சாய ஆலைகளுக்கு மானியமும், ரூ.200 கோடி வட்டியில்லா கடனும் கொடுத்து மீண்டும் இயங்க அதிமுக அரசு உதவி செய்தது.

மத்தியில் தமிழக மக்களின் பங்கை எடுத்துச் செல்லவும், வலுவான அரசை கொண்டு வரவும் அதிமுக வேட்பாளர்களை ஆதரிப்பது என முடிவு செய்துள்ளோம் என்றார்.

கொ.ம.தே.க வேட்பாளர் ஈஸ்வரன் மீது கொடுக்கப்பட்ட புகார் குறித்து தனியரசு கூறுகையில், வழக்கு குறித்த நீதிமன்றத் தீர்ப்பு வந்தால் மட்டுமே வேட்புமனு நிராகரிக்கப்படும் என விதிமுறை உள்ளது. ஆனால், தன் மேல் உள்ள வழக்குகளை வேட்புமனுவில் மறைத்துள்ளார். இதுகுறித்து புகார் செய்வோம்.

பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு மீட்பு, ஈழத்தமிழர் உரிமை மீட்பு, தமிழ் மீனவர்கள் உயிர் காப்பு, காவிரி ஆற்று நீர் உரிமை, முல்லைபெரியாறு உரிமை போன்ற தமிழ் சமூகத்திற்கு எதையும் அறிவிக்கவில்லை. காங்கிரஸை போன்று அதற்கு இணையாக உள்ளது பா.ஜ.க. அதன் வேட்பாளர்களை கூடுதல் பலத்துடன் எதிர்க்கிறோம் என்றார்.

இதில் கொங்குநாடு முன்னேற்றக் கழக நிறுவனர் பெஸ்ட் ராமசாமி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தனியரசு, தீரன் சின்னமலை பேரவை எம்.ராஜாமணி, கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை மணிக்கவுண்டர் ஆகியோர் பங்கேற்றனர்.

பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு மீட்பு, ஈழத்தமிழர் உரிமை மீட்பு, தமிழ் மீனவர்கள் உயிர் காப்பு, காவிரி ஆற்று நீர் உரிமை, முல்லைபெரியாறு உரிமை போன்ற தமிழ் சமூகத்திற்கு எதையும் அறிவிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x