

மத்திய அரசின் நேரடி காஸ் மானிய திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் 3 லட்சம் சமையல் காஸ் இணைப்புகள் முடக்கப்பட்டுள்ளன என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் நேரடி காஸ் மானிய திட்டம் கடந்த ஜனவரி 1-ம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதற்கான பணிகளை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே தொடங்கின. அப்போது தமிழகத்தில் மானிய விலையில் காஸ் சிலிண்டர் பயன்படுத்தும் நுகர்வோர் எண்ணிக்கை மொத்தம் 1 கோடியே 53 லட்சமாக இருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது.
இது குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரி ஒருவர் கூறும்போது, “தமிழகத்தில் நேரடி மானிய திட்டத்தில் தற்போது நுகர்வோர் பலர் இணைந்து வருகிறார்கள். திட்டம் அமல்படுத்தப்பட்டு பிறகு கடந்த 3 மாதங்களில் 3 லட்சம் நுகர்வோர்களுடைய காஸ் இணைப்பு முடக்கப்பட்டுள்ளது. இந்த நுகர்வோர்கள் 6 மாதங்களுக்கு மேலாக புதிய சிலிண்டர்களை பதிவு செய்யாமல் இருந்த காரணத்துக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காஸ் இணைப்பு முடக்கப்பட்டுள்ள நுகர்வோர்களுக்கு மீண்டும் இணைப்பு வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட காஸ் ஏஜென்சியிடம் தற்போது உள்ள வீட்டு முகவரி மற்றும் KYC எனப்படும் (know your customer) உங்கள் நுகர்வோரை அறிந்து கொள்ளுங்கள் என்ற படிவத்தை பூர்த்திசெய்து கொடுத்தால் மீண்டும் காஸ் இணைப்பு வழங்கப்படும்” என்றார்.
தற்போது தமிழகத்தில் மானிய விலையில் சமையல் காஸ் பயன்படுத்தும் நுகர்வோர் எண்ணிக்கை 1 கோடியே 50 லட்சமாக உள்ளது. இவர்களில் நேரடி மானிய திட்டத்தில் இதுவரை 1 கோடியே 25 லட்சம் பேர் வரை இணைந்துள்ளனர்.
சுமார் 7 லட்சத்து 16 ஆயிரம் நுகர்வோர் நேரடி மானிய திட்டத்தில் இணைவதற்கான படிவங்கள் கொடுத்து காத்துக் கொண்டிருக்கின்றனர். சுமார் 17 லட்சத்து 84 ஆயிரம் நுகர்வோர் தற்போது வரை நேரடி மானிய திட்டத்தில் இணையாமல் உள்ள னர்.
தற்போது நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியத் துடன் கூடிய காஸ் சிலிண்டர் ரூ.404.50 ஆகும், மானியம் இல்லாத காஸ் சிலிண்டர் விலை ரூ.605.50 ஆகும்.
ஏப்ரல் முதல் மானியம் இல்லை
நுகர்வோர்களுக்கு இந்த மாதம் வரை மட்டும் மானிய விலையில் சிலிண்டர்கள் வழங்கப்படும். வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நாட்டில் உள்ள அனைவரும் சந்தை விலையில்தான் சமையல் காஸ் விநியோகம் செய்யப்படும். ஆனால் நேரடி காஸ் மானிய திட்டத்தில் சேர்ந்த நுகர்வோருக்கு ஏப்ரல் மாதத்தில் சந்தை விலையில் சிலிண்டர் வழங்கப்பட்டு, மானியத் தொகை நுகர்வோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். நேரடி காஸ் மானிய திட்டத்தில் சேராதவர்கள் சந்தை விலை கொடுத்துத்தான் சமையல் காஸ் சிலிண்டர்களை பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.