Published : 30 Mar 2015 10:11 AM
Last Updated : 30 Mar 2015 10:11 AM

திருவாரூர் பல்கலைக்கழக விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை

திருவாரூர் பல்கலைக்கழக கட்டிட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜி.ராமகிருஷ்ணன் (சிபிஎம் மாநில செயலாளர்):

திருவாரூர் மத்திய பல்கலைக் கழக விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். விபத்து குறித்து பதவியில் உள்ள நீதிபதியைக் கொண்டு விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்): தமிழகத்தில் அண்மைக்காலமாக கட்டுமான விபத்துகள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவாரூர் பல் கலைக்கழக கட்டிட விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சமும் தமிழக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும்.

தொல்.திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்): திருவாரூர் மத்திய பல்கலைக் கழகம் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் ரூ.250 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலை யில் பல்கலைக்கழக கட்டிடத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். விபத்துக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x