விதிகளை மீறி குடிநீர் நிறுவனம்: மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை

விதிகளை மீறி குடிநீர் நிறுவனம்: மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை
Updated on
1 min read

விதிகளை மீறி குடிநீர் நிறுவனம் இயங்குவது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த ஜி.ஜெயபிரகாஷ் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வில் கடந்த ஆண்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

“முசிறி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் எஸ்.எம்.ஆர். அகுவா ஃபுட் என்ற அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. கிடைக்கும் மழைநீரை விட அதிகமாக நிலத்தடிநீர் உறிஞ்சப்படும் பகுதியாக முசிறி ஒன்றியம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் வணிக நோக்கில் நிலத்தடி நீரை எடுக்கக் கூடாது என்று தமிழ்நாடு நிலத்தடிநீர் சட்டம் கூறுகிறது. ஆனால் விதிகளை மீறி இந்த குடிநீர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனம் செயல்பட தடை விதிக்க வேண்டும். இந்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி எம்.சொக்கலிங்கம், தொழில்நுட்பத் துறை உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “இவ்விவகாரம் தொடர்பாக மாசுக் கட்டுப்பாடு வாரியம் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை. அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்யாவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்” என்று எச்சரித்த அமர்வின் உறுப்பினர்கள், அடுத்த விசாரணையை மார்ச் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in