Published : 27 Mar 2015 10:49 AM
Last Updated : 27 Mar 2015 10:49 AM

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து மே 14-ம் தேதி நாடு முழுவதும் போராட்டம்: புதுச்சேரி மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் தீர்மானம்

நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மே 14-ம் தேதி போராட்டம் நடத்துவது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது அகில இந்திய மாநாடு புதுச்சேரியில் கடந்த 25-ம் தொடங்கியது. பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி தொடக்கவுரை ஆற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் பிரகாஷ் காரத் உட்பட இடதுசாரி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பேசினர்.

இந்நிலையில் 2-ம் நாளான நேற்று அரசியல் சூழல், கட்சி செயல்பாடுகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன. அப்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

விவசாயிகள், விவசாயத்துக்கு பாதிப்பு உண்டாகும் வகையில் மத்திய அரசு நிலம் கையகப் படுத்தும் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டத்தில் 80 சதவீதம் உரிமையாளர்கள் ஒப்புதல் பெற வேண்டும், பாதிப்பு குறித்து சமூக ஆய்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட அம்சங்களை நீக்கி உள்ளனர். இதனால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

தனியார் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக கொண்டுவரப்பட்டுள்ள இந்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவிடாமல் தடுக்க வேண்டும். இதன் தொடர்ச்சியாக வரும் மே மாதம் 14-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும்.

மணிப்பூர் மாநிலத்தில் நடைமுறையில் உள்ள ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசு உடனே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் ஆகிய 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து மாநாட்டு நிகழ்வுகள் தொடர்பாக கட்சியின் தேசிய கவுன்சில் செயலாளர் ஷமி பைசி, முன்னாள் அமைச்சர் பினாய் விஸ்வம், தேசியக் குழு உறுப்பினர் நாரா.கலைநாதன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறும்போது:

கடந்த தேர்தல்களில் கட்சிக்கு ஏற்பட்ட செல்வாக்கு சரிவை மீட்கும் வகையில் அடித்தட்டு மக்களுடன் இணைந்து செயல்படுவது குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இழந்த செல்வாக்கை மீட்கும் வகையில் மாநாட்டில் உரிய முடிவுகள் எடுக்கப்படும்.

இடதுசாரி கட்சிகள் இணைந்து செயல்படுவதற்கான உத்திகள் குறித்து பிரதிநிதிகள் பேசினர். தற்போது இணைந்து செயல்படும் இடதுசாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இளையதலைமுறையினரை எளிதில் அணுகும் வகையில் சமூக வலைதளங்களிலும் கட்சியின் பங்கேற்பை தீவிரப்படுத்த ஆலோசிக்கப்பட்டது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x