தொடரும் தாது மணல் கொள்ளை: தலைமை செயலர், உள்துறை செயலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

தொடரும் தாது மணல் கொள்ளை: தலைமை செயலர், உள்துறை செயலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
Updated on
1 min read

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வி.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

கன்னியாகுமரி மாவட்டத்தில் முகிலன்குடியிருப்பு, கிண்ணிக் கண்ணன்விளை, இலந்தையடி விளை ஆகிய கடலோர கிராமங் களில் மோனோசைட் தாது மணல் அதிகமாக உள்ளது. இந்த கிராமங்களில் சுனாமிக்குப் பின் 2005-ம் ஆண்டில் அலையாத்திக் காடுகள் வளர்க்கப்பட்டன. தற் போது, மரங்கள் வளர்ந்து அப்பகுதி சோலை போல் காட்சியளிக்கிறது.

இந் நிலையில், இந்த 3 கிராமங் களிலும் வி.வி.மினரல்ஸ் பங்குதாரர் வைகுண்டராஜன் உட்பட 22 பேர் சட்டவிரோதமாக தாது மணல் அள்ளி வருகின்றனர். மரங்களையும் வெட்டி வருகின்றனர். இதை தடுக்கவும், சட்டவிரோதமாக மணல் அள்ளுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி தாக்கலான மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, அந்த இடங்களை பாதுகாக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதன் பிறகும் அந்த கிராமங் களிலும், பக்கத்து கிராமங்களிலும் சட்டவிரோதமாக மணல் அள்ளி வருகின்றனர். இது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயல். எனவே, தலைமைச் செயலர் மோகன் வர்கீஸ் சுங்கத், உள்துறைச் செயலர் அபூர்வ வர்மா, டிஜிபி அசோக்குமார், குமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ஆர் சவான், குமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன், கனிமவளத் துறை இயக்குநர் கே.பாலசுப்பிர மணியன் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவுக்குப் பதில் அளிக்குமாறு தலைமைச் செயலர் மற்றும் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 12-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in