Published : 23 Mar 2015 10:31 AM
Last Updated : 23 Mar 2015 10:31 AM

ரூ.15 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு: ஒருவர் கைது; 2 ப்பேருக்கு வலைவீச்சு

சென்னையில் ரூ.15 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த நபரை போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். திருச்சியை சேர்ந்த சகோதரிகள் சீதாலஷ்மி(65) மற்றும் காமாட்சி (63). இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இவர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டிருந்ததாவது:

ஓய்வு பெற்ற தென்னக ரயில்வே அதிகாரியான எங்கள் தந்தை சுப்ரமணி, கடந்த 1974-ம் ஆண்டு, சென்னை அண்ணாநகர் நடுவங்கரையில் 5,000 சதுர அடி நிலத்தை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் வாங்கியுள்ளார்.

1977-ம் ஆண்டு அந்த நிலத்தை எங்கள் பெயருக்கு மாற்றி செம்பியம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். 1995-ம் ஆண்டு எங்கள் தந்தை இறந்த பிறகு நிலத்தை பாதுகாப்பதற்காக ஒரு காவலாளியை நியமித்துவிட்டு நாங்கள் திருச்சிக்கு இடம்பெயர்ந்துவிட்டோம்.

இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு நாங்கள் இருவரும் எங்கள் நிலத்தை பார்வையிட வந்தோம். அப்போது நிலத்தை சிலர் அபகரித்தது தெரியவந்தது. போலீஸார் நடவடிக்கை எடுத்து ரூ.15 கோடி மதிப்புள்ள 5,000 சதுர அடி நிலத்தை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், ஆறுமுகம் என்பவர் நிலத்தை அபகரிக்க திட்டம் தீட்டி நிலத்தின் உரிமையாளர்களான சீதாலஷ்மி மற்றும் காமாட்சி ஆகியோரின் தந்தையான சுப்ரமணி என்பவரை போல போலியான ஒரு நபரைக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்தது. மேலும் சுப்ரமணி தன்னுடைய பெயருக்கு நிலத்தை விற்பனை செய்தது போன்று போலி ஆவணங்களை தயார் செய்த ஆறுமுகம், அந்த நிலத்தை துரைபாபு என்பவருக்கு விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து ஆறுமுகம், துரைபாபு மற்றும் சுப்ரமணி போல் ஆள்மாறாட்டம் செய்த நபரை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 18-ம் தேதி குற்றவாளிகளில் ஒருவரான துரைபாபுவை போலீஸார் கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற இருவரையும் கைது செய்ய போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x