

பாஜக கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சித் (ஐ.ஜே.கே) தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூரில் களமிறங் குவதாகவும் திமுக தரப்பில் செல்வராஜ் முனைப்பு காட்டு வதாகவும் செய்திகள் வருகின்றன.
பெரம்பலூர் (தனி), லால்குடி, துறையூர் (தனி), மண்ணச்சநல்லூர், முசிறி, குளித்தலை என பெரம்பலூர், திருச்சி, கரூர் மாவட்டங்களில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி சிதறிக் கிடக்கிறது. பெயர் அறிவித்த பிறகும்கூட வேட்பாளர் மாற்றம் வரலாம் என்பதால் அதிமுக தரப்பில் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லமுடியவில்லை. பாஜக கூட்டணியில் உள்ள ஐ.ஜே.கே. நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதி யை தனக்காக கேட்டுக் கொண்டி ருப்பதாக அந்தக் கட்சி வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய அந்தக் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட முக்கியப் பொறுப்பாளர்கள், ’’தொகுதி முழுக்க உடையார் சமூகத்து ஓட்டுகள் விரவிக் கிடக்கிறது. வல்லாபுரம் அருகில் விவசா யிகள் வாழ்வுரிமை மாநாடு நடத்தியது, கொணலை அருகே காலூன்றிய எஸ்.ஆர்.எம். கிளை மற்றும் அதையொட்டிய பகுதி மக்களுக்கான வேலைவாய்ப் புகள், நலத்திட்டங்கள் என நாடாளுமன்றத் தொகுதியை குறிவைத்து ஆண்டுக்கணக்கில் காய்நகர்த்திக் கொண்டிருக்கிறார் பாரிவேந்தர்’’ என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
திமுக தரப்பில் மீண்டும் இங்கே நெப்போலியனுக்கு வாய்ப்பு அறவே கிடையாது என்கின்றனர். ’’நேரு தனக்கு எதிராக இருப்பதால் இம்முறை தனக்கு வாய்ப்புக் கொடுக்கமாட்டார்கள் என்பதும் மீண்டும் வாய்ப்புக் கிடைத்தாலும் தொகுதி மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதும் நெப்போலியனுக்கு தெரியும். அதனால்தான் தைரியமாக அழகிரிக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லப் போனார்’’ என்கிறது பெரம்பலூர் திமுக வட்டாரம்.
இந்த இடைவெளியை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு கச்சை கட்டுகிறார் திமுக-வின் முன்னாள் வனத்துறை அமைச்சர் செல்வராஜ். திருச்சி மற்றும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிகளுக்கு கட்சியில் விருப்ப மனு கொடுத்திருக்கும் செல்வராஜ் பெரம்பலூரை முதல் வாய்ப்பாக வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். தனக்கில்லை என்றாலும் தனது மகன் கருணைராஜாவை இங்கு நிறுத்திவிட வேண்டும் என்பதில் செல்வராஜ் கவனமாய் இருக் கிறார்.
கே.என்.நேரு, செல்வராஜ், திருச்சி சிவா இவர்களை திருச்சி திமுக-வில் மூவேந்தர்கள் என வர்ணிக்கிறார்கள். திருச்சி சிவா மீண்டும் மாநிலங்களவை எம்.பி. ஆகிவிட்டார். இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பேசும் செல்வராஜ் வட்டாரம், இம்முறை அண்ணனுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என ஆவலோடு காத்திருக்கிறது.