Last Updated : 21 Mar, 2015 08:31 AM

 

Published : 21 Mar 2015 08:31 AM
Last Updated : 21 Mar 2015 08:31 AM

மும்பையில் அந்தரத்தில் பயணிகள் தவிப்பு எதிரொலி: மோனோ ரயில் சென்னைக்கு உகந்ததா?

சென்னையில் மோனோ ரயில் திட்டத்தை அமல்படுத்த அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. மும்பையில் கடந்த சில தினங்களுக்கு முன் மோனோ ரயில் சேவை தடைபட்டதால் பயணிகள் அந்தரத்தில் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதுபோன்ற சூழ்நிலையில் சென்னைக்கு இத்திட்டம் தேவைதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னையில் மோனோ ரயில் திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. முதலில், 4 வழித்தடங்களில் இயக்கப்படவிருந்த மோனோ ரயில், தற்போது வடபழனி-பூந்தமல்லி, கத்திப்பாரா-பூந்தமல்லி ஆகிய இரு தடங்களில் மட்டும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மோனோ ரயில் திட்டத்தை அமல்படுத்துவதற்கு அனுமதி கோரிய தமிழக அரசின் மனுவுக்கு மத்திய அரசு கடந்த நவம்பர் மாதத்தில் ஒப்புதல் அளித்தது. எனினும், திட்டப் பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டர் இறுதி செய்யப்படாமல் உள்ளது.

சென்னைக்கு மோனோ ரயில் தேவையா, மெட்ரோ ரயில் மட்டும் போதாதா என்ற சர்ச்சை பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. இது குறித்து அரசுத் தரப்பில் கேட்டபோது, “மோனோ ரயில் திட்டத்துக்கு குறைந்த அளவு நிலத்தை கையகப்படுத்தினாலே போதும் என்பதால் அதிகம் பேர் பாதிக்கப்படமாட்டார்கள். மேலும், இதை விரைவாக கட்டிமுடித்து செயல்படுத்த முடியும்” என்று வாதிட்டனர். மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடு களில் இயக்கப்படுவதையும், மும்பையில் மோனோ ரயில் இயக்கப்படுவதையும் அரசுத் தரப்பில் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதற்கிடையே, கடந்த வாரத்தில் மும்பையில் மின்தடை காரணமாக ஒரு மோனோ ரயில் நடுவழியில் அந்தரத்தில் நின்றது. அதிலிருந்த பயணிகளை தீயணைப்புத் துறையினர் ஏணி மூலம் மீட்க நேர்ந்தது. இதனால் சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. எனவே, மோனோ ரயில் திட்டம், பெரு நகரங்களுக்கு உகந்ததுதானா என்ற கேள்வி வலுப்பெற்றுள்ளது.

இது குறித்து உலகளாவிய அளவில் செயல்பட்டுவரும் பொது போக்குவரத்து மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் (ஐடிடிபி) நிறுவனத்தின் இந்திய பிராந்தியத்துக்கான திட்ட இயக்குநர் ஷ்ரேயா கடேபள்ளி, ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:

மோனோ ரயில் வெற்றிகரமான திட்டம் அல்ல. சிட்னி போன்ற நகரங்களில், அதை கைவிடுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வரு கிறது. மோனோ ரயிலில் அதிகபட்சம் 10 ஆயிரம் பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். பாதுகாப்பு அம்சங்களும் குறைவு.

ஆனால், மெட்ரோ ரயிலில் அதிக பெட்டிகள் இருப்பதால் ஒரு திசையில், ஒரு மணி நேரத்தில், 25 ஆயிரம் பேர் பயணம் செய்யலாம். சென்னை மெட்ரோ ரயிலில் ஒரு நாளில் 8 லட்சம் பயணிகள் வரை பயணிக்கலாம். ஓர் அரசு, போக்குவரத்துத் திட்டத்தை செயல்படுத்த நினைக்கும்போது அதிக பயணிகளுக்கு பயனளிக்கக் கூடிய பெரிய திட்டங்களைப் பற்றியே யோசிக்க வேண்டும். இல்லையேல் பி.ஆர்.டி.எஸ். (வேக பஸ் போக்குவரத்து) போன்ற பஸ்களுக்கான தனிப் பாதை அமைத்து அதிக பயணி களை ஏற்றிச் செல்லும் திட்டத்தை அமல்படுத்தலாம். போகோட்டா போன்ற மேலை நகரங்களில் பி.ஆர்.டி.எஸ். மூலம் மணிக்கு 45 ஆயிரம் பேர் பயணம் செய் கின்றனர்.

சென்னையில் எம்டிசி-யில் நாளொன்றுக்கு 50 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். எம்டிசி அறிமுகப்படுத்திய மினிபஸ் சேவை, நாட்டுக்கே முன்னுதாரணமாக உள்ளது. அதை சென்னையில் பல இடங்களில் விரிவுபடுத்தலாம் என்றார்.

‘மெட்ரோ மனிதர்’ கருத்து

இந்த நிலையில் சென்னை ஐஐடியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த ‘மெட்ரோ மனிதர்’ என்றழைக்கப்படும் டெல்லி மெட்ரோ ரயில் முன்னாள் திட்ட இயக்குநர் இ.ஸ்ரீதரன் கூறும்போது, “மோனோ ரயில் திட்டம் அதிக பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு உகந்ததல்ல. அதை அமல்படுத்த தமிழக அரசு ஏன் தீவிரமாக உள்ளது எனத் தெரியவில்லை. நானும் எனது கருத்தை பலமுறை தெரிவித்துவிட்டேன். மேலும், உலகில் 3 நிறுவனங்கள் மட்டுமே இத்திட்டத்தை செயல் படுத்துகின்றன. போட்டி குறைவு என்பதால் அதிக செலவாகும். சென்னை போன்ற நகரங்களுக்கு மெட்ரோ ரயில்தான் உகந்தது. சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் வேகம் அதிகரிக்கப்பட வேண்டும்” என்றார்.

அதேநேரத்தில் சில போக்கு வரத்து நிபுணர்களும், மக்கள் நலச்சங்கத்தினரும், மோனோ ரயிலை போரூர், அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர் போன்ற புறநகர்ப் பகுதிகளில், மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் ரயில் நிலையம் மற்றும் முக்கிய பஸ் நிலையங்களை இணைக்கும் ‘பீடர் சர்வீஸ்’ போல் பயன்படுத்தலாம் என்று கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x