

தமிழகம் முழுவதும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் வட்ட மருத்துவமனைகளில் 167 சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று தொடங்கி வரும் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் (டிஎம்எஸ்) சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் வட்ட மருத்துவமனைகளில் 167 சிறப்பு மருத்துவ முகாம்கள், மார்ச் 28 (இன்று) முதல் ஏப்ரல் 5 வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் தாய்சேய் நல சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்க உள்ளனர். இருதயம், சிறுநீரகம், நரம்பியல், கண், காது, மூக்கு, பல் போன்ற நோய்களுக்கான சிறப்பு மருத்துவர்கள் முகாம்களில் கலந்துகொண்டு பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளன.
மேலும் முகாம்களில் தடுப்பூசி, ரத்தம் மற்றும் முழு ஆய்வகப் பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை, 5 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கான சிறப்பு பரிசோதனை, அனைத்து தாய்சேய் நல விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து பிக்மி எண் வழங்குதல், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் பதிவு செய்தல், மருத்துவ நிபுணர்களின் பேறுகால பராமரிப்பு குறித்த தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், சிறப்பு கவனம் தேவைப்படும் தாய்மார்களுக்கு உடன் மருத் துவ உயர் சிகிச்சைக்கு பரிந்துரைத்தல் ஆகியவையும் நடைபெற உள்ளது.
உயர் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் அனைவரும் முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்